இந்தியாவில் டெஸ்லா நிறுவனம்: மின்சார வாகனங்கள் இறக்குமதி வரியை குறைக்க கோரிக்கை

மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரிகளை குறைக்க, பிரதமரிடம் டெஸ்லா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம்: மின்சார வாகனங்கள் இறக்குமதி வரியை குறைக்க கோரிக்கை
x
உலக அளவில் மின்சார வாகனங்கள் உற்பத்தியில், அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் முன்னணியில் உள்ளது. இதன் நிறுவனர் எலோன் மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 

29 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்ட மின்சார வாகனங்கள் இறக்குமதிக்கு தற்போது இந்தியாவில் 60 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. 29 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை விட அதிக விலை கொண்ட மின்சார வாகனங்கள் மீது 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.


இந்தியாவில் மின்சார வாகனங்கள் விற்பனையை இந்த ஆண்டில் தொடங்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் இங்கு மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரிகளை குறைக்கும்படி பிரதமர் அலுவலகத்திடம், டெஸ்லா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக டெஸ்லா இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியான மனுஜ் குரானா கடந்த மாதம் பிரதமர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.  

டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களின் விலை 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ளதால், அவற்றை இறக்குமதி செய்தால், 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் சூழல் உள்ளது. இதனால் இந்தியாவில் டெஸ்லா கார்கள் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும் என்பதால், இறக்குமதி வரிகளை குறைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாகா பிரதமர் நரேந்திர மோடியை, டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரிகளை குறைத்தால், இந்தியாவில் உள்ள மின்சார வாகன உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால்,  மத்திய அரசு இந்த விசயத்தில் தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்