நீரஜ் சோப்ரா செல்வாக்கு அதிகரிப்பு: சமூக வலைதள மதிப்பு ரூ. 428 கோடியாக அதிகரிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பின்னர் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் சமூக வலைதளங்களின் மதிப்பு 428 கோடியாக அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரஜ் சோப்ரா செல்வாக்கு அதிகரிப்பு: சமூக வலைதள மதிப்பு ரூ. 428 கோடியாக அதிகரிப்பு
x
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று சரித்திர சாதனை நிகழ்த்திய  நீரஜ் சோப்ராவை தேசம் கொண்டாடியது. பல தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்ட நிலையில், மாநில அரசுகள், விளையாட்டு அமைப்புக்கள், நிறுவனகங்களிடம் இருந்து அவருக்கு பரிசுகளும் குவிந்தன.  

டோக்கியோ ஒலிம்பிக்கில் படைத்த சாதனை அவருக்கு சமூக வலைதளங்களிலும் செல்வாக்கை அதிகரிக்க செய்தது.  அவரை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது உலக அளவில் சமூக வலைதள பதிவுகளில் அதிகம் குறிப்பிடப்பட்ட வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.

அப்போது 14 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்கள், 29 லட்சத்திற்கும் அதிகமாக நீரஜ் சோப்ரா பற்றிய குறிப்புகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் என யூகோவ் ஸ்போர்ட் நிறுவன ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் தங்கம் வென்றதை அடுத்து நீரஜ் சோப்ராவின் சமூக ஊடக தொடர்புகள் ஒரு கோடியே 27 லட்சத்தை தாண்டியது. அதாவது 86 புள்ளி 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 297 சதவீதம் அதிகரித்தது. 45 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டாவில் அவரை பின்தொடர்கிறார்கள். இவ்வாறு செல்வாக்கு அதிகரிப்பதன் மூலம், நீரஜ் சோப்ராவின் சமூக வலைதள மதிப்பு 428 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் யூகோவ் ஸ்போர்ட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் அதிகமான பின்தொடர்வோரை வைத்திருப்போர் வணிக ரீதியில் வெளியிடும் விளம்பரங்களுக்கு, விளம்பரதாரர் தரப்பில் கட்டணம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய ஒரு விளம்பர பதிவுக்கு 3 கோடி ரூபாய் வரையில் வருவாயாக ஈட்டுகிறார்.

நிரஜ் சோப்ரா ஒரு நிறுவனத்திற்கு விளம்பர தூதராக இருக்க கட்டண தொகையை 20 லட்சம் ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்