கோவாக்சின், கோவிஷீல்டு கலப்புக்கு பரிந்துரை : "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்" - ஐ.சி.எம்.ஆர். வெளியிட்ட அறிக்கை

பல்வேறு கொரோனா தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது பற்றி இந்தியா மற்றும் பல்வேறு உலக நாடுகளில் முன்னெடுக்கப்படும் நடைமுறைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கோவாக்சின், கோவிஷீல்டு கலப்புக்கு பரிந்துரை : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் - ஐ.சி.எம்.ஆர். வெளியிட்ட அறிக்கை
x
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இதுவரை மொத்தம் 50.86 கோடி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது, புதிய ரக கொரோனா வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதாக ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது. கடந்த மே, ஜுன் மாதங்களில் உத்தர பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் ஐ.சி.எம்.ஆர் இதை கண்டறிந்துள்ளது. கனடா, தாய்லாந்து, பஹ்ரைன், பூட்டான், இத்தாலி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில், இரு வேறு கொரோனா தடுப்பூசிகள் கலந்து பயன்படுத்தப்படுகின்றன. இப்படி கலந்து பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாடு ஆணையம் மற்றும் ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் ஆகியவை ஆதரவளித்துள்ளன. ஆனால் இதுவரை இதற்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது ஆபத்தானது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் சென்ற மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய மூன்றாவது டோஸ் தடுப்பூசி அளிக்கும் முறைக்கு உலக சுகாதார நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதையும் மீறி, ஜெர்மனி, இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் நாடுகள் இதை முன்னெடுத்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்