காஷ்மீரில் இரு இடங்களில் மேக வெடிப்பு - அமர்நாத் குகைக்கோவில் அருகே வெள்ளம்

காஷ்மீரில் ஒரேநாளில் 2 இடங்களில் மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டி தீர்த்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரில் இரு இடங்களில் மேக வெடிப்பு - அமர்நாத் குகைக்கோவில் அருகே வெள்ளம்
x
காஷ்மீரில் ஒரேநாளில் 2 இடங்களில் மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டி தீர்த்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  

ஒரு நிரம்பிய குடத்தில் இருக்கும் நீரை தலைகீழாக கொட்டுவது போன்று, இடிமுழக்கத்துடன் குறிப்பிட்ட பரப்பளவிற்குள் கனமழை கொட்டும் நிகழ்வாக மேகவெடிப்பாக கருதப்படுகிறது. 

பூமியிலிருந்து சுமார் 15 கி.மீ. உயரத்துக்கு மேலிருக்கிற மேகங்களில் இருந்து இந்த மழை உருவெடுப்பதாகவும், ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாகக்கூட பெய்யக்கூடும் என்றும்  வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

இந்தியாவில் பெரும்பாலும் இமயமலையை ஒட்டிய காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் மேகவெடிப்பு ஏற்படுகிறது.

காஷ்மீரில் ஒரே நாளில் 2 இடங்களில் மேகவெடிப்பால் கனமழை கொட்டி தீர்த்துள்ளது.

கிஷ்த்வார் மாவட்டம் ஹொன்சார் கிராமத்தில் புதன்கிழமை அதிகாலையில் 4.30 மணிக்கு மேகவெடிப்பால் பெருமழை பெய்தது. வெள்ளப்பெருக்கில் வீடுகள், தொழுவங்கள் அடித்துச் செல்லப்பட்டது. 

இங்கு போலீஸ், ராணுவம், மாநில பேரிடர் மேலாண்மை படையினர் கூட்டாக மீட்பு பணிகளை தொடங்கினர். 

கிராமத்திற்கு கடைசி சாலை இணைப்பில் இருந்து 3 மணி நேரம் நடந்துதான் செல்ல வேண்டியதிருக்கிறது என்றும் கிராமத்தில் 7 பேர் உயிரிழந்தனர் என்றும் மாயமானவர்களை தேடும் பணி நடக்கிறது என்றும் மீட்பு படையினர் தெரிவித்தனர். 

இதேபோன்று, அமர்நாத் குகைக்கோவில் அருகேயும் மேகவெடிப்பால் பெருமழை கொட்டி வெள்ளம் பெருக்கெடுத்தது. 

மேகவெடிப்பால் கோவிலுக்கு எந்த சேதமும் இல்லை எனவும் உயிரிழப்பு எதுவும் நேரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
  
கொரோனா காரணமாக அமர்நாத் குகைக்கோவிலில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை தொடர்ந்து 2-வது ஆண்டாக ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள கூடுதல் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர். 

இமாசலபிரதேசத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருமழை, வெள்ளத்துக்கு 9 பேர் பலியாகியுள்ளனர். இதேபோன்று லடாக்கிலும் கார்கில் பகுதியில் மேகவெடிப்பால் பெருமழை கொட்டி தீர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்