நிலச்சரிவில் சிக்கிய 73 பேர் சடலங்கள் மீட்பு - கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம்

கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
நிலச்சரிவில் சிக்கிய 73 பேர் சடலங்கள் மீட்பு - கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம்
x
எங்கு திரும்பினாலும்... தேங்கி நிற்கும் வெள்ளநீர்... தண்ணீரில் மூழ்கி போன வீடுகள்... கோயிலின் கோபுரம் மட்டுமே கண்களுக்கு தெரிகிறது.... தோண்ட தோண்ட மீட்கப்பட்டு வரும் சடலங்கள் ஒருபுறம்... தத்தளித்து கொண்டிருக்கும் மக்களை காக்க விரையும் படகுகள் இன்னொரு புறம்... என வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது, மகாராஷ்டிரா. அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 113 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கொங்கன் பகுதியில் உள்ள மூன்று மாவட்டங்கள் கடுமையான நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்கள் தொடர்ந்து  மீட்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 73 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் கோலாப்பூர், ஷாங்லி, சத்தாரா, ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. ஷாங்லி மாவட்டத்தில் உள்ள வால்வா எனும் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்...குறிப்பாக கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டதால், கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பல கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துவிட கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதி மக்களை வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 800க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஷாங்லி  மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்குள் முதலைகள் படையெடுக்க தொடங்கியுள்ளன. சாலைகளில் சர்வ சாதாரணமாக நடமாடும் முதலைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.தொடர் மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததில், பொருட்கள் மற்றும் முக்கிய சான்றிதழ்கள், பத்திரங்கள் கூட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர், மாகாத் பகுதியில் வசிக்கும் மக்கள் 
இந்தநிலையில், ரத்னகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளச்சேதங்கள் குறித்து அந்த மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்