இந்தியாவின் மிக நீளமான நதி மேம்பாலம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

அசாம் மாநிலம் பிரம்மபுத்ரா ஆற்றின் மீது அமைய இருக்கும் பாலங்கள் குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்தும் தற்போது பார்க்கலாம்
இந்தியாவின் மிக நீளமான நதி மேம்பாலம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
x
வடகிழக்கும் மாநிலங்களான அசாமையும் மேகாலயாவையும் இணைக்கு வகையில் பிரம்மபுத்ரா ஆற்றின் மீது தூப்ரி -புல்பாரி இடையே அமையவுள்ள பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார், பிரதமர் மோடி. சுமார் 19.282 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிரம்மபுத்ரா நதியின் மீது நான்குவழி பாலமாக இந்த பாலம் அமைய உள்ளது. சுமார் நான்காயிரத்து 997 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் கட்டப்பட உள்ளது. தற்போது ஆற்றின் இரு கரைகளுக்கும் இடையே பயணிக்க பரிசலை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலை வழியாக சென்றால் 205 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டி வரும் நிலையில், இந்த புதிய பாலம் மூலம் இந்த தொலைவு 19 கிலோ மீட்டராக குறைந்துவிடும்.

இந்த திட்டம் 2026-27 க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படகின் மூலம் ஆற்றை கடக்க  இரண்டரை மணி நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் புதிய திட்டம் நிறைவு பெறும் பட்சத்தில் நதியை கடக்க 20 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். இந்தியாவில் இருக்கும் மிக நீளமான நதி மேம்பாலமாக அசாமில் உள்ள தோலா - சடியாவுக்கு இடையேயான மேம்பாலம் உள்ளது. இதன் நீளம் 9 புள்ளி 15 கிலோ மீட்டராக உள்ளது. திட்டம் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இந்தியாவின் மிக நீளமான நதி மேம்பாலமாக இந்த பாலம் திகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான ஜிகா அமைப்பின் கடனுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இவை தவிர பிரம்மபுத்திராவின் குறுக்கே மஜுலிக்கும் ஜோர்ஹாட்டுக்கும் இடையேயான இரு வழி மேம்பாலத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு பிரம்மபுத்ரா நதியின் மீது 305 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணம் செய்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, பாலம் என்பது பொதுமக்களின் முதன்மை கோரிக்கையாக திகழ்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்