'பத்மஸ்ரீ' விருதுபெறும் சுப்பு ஆறுமுகம்

தமிழரின் பாரம்பரிய இசைக் கலையான வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் பத்மஸ்ரீ விருது பெற தேர்வாகியுள்ளார்.
பத்மஸ்ரீ விருதுபெறும் சுப்பு ஆறுமுகம்
x
தமிழரின் பாரம்பரிய இசைக் கலையான வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் பத்மஸ்ரீ விருது பெற தேர்வாகியுள்ளார். இந்த கவுரவத்திற்காக அவர் மேற்கொண்ட கலைப் பயணத்தை பார்க்கலாம்...

கலை, இலக்கியம், பண்பாட்டில் மனித குலத்துக்கு முன்னோடி என்பது தமிழரின் உணர்வு. யாழ், துடும்பு, பறை, பேரிகை, கொம்பு என செவிகளை ஈர்க்கும் மெல்லிசையும், போர் முரசு கொட்டும் வல்லிசையும், தங்களின் பெயர் சொல்லும் என்பது தமிழரின் பெருமை.  அதில் ஒன்றுதான் வில்லுப்பாட்டு. 

இதிகாச கதைகள் முதல் நிகழ்கால நடப்புகள் வரை தேவைக்கேற்ப எளிய மக்களிடம் எடுத்துச் சென்றது சலங்கையுடன் கூடிய இந்த வில்லுப்பாட்டுதான். வில்லிசைப்பட்டு என்றாலே நினைவுக்கு வரும் ஒரு பெயர் சுப்பு ஆறுமுகம். 1928 ஜூலை 12ஆம் தேதி நெல்லை மாவட்டம் புதுக்குளத்தில் பிறந்த சுப்பு ஆறுமுகம், தற்போது சென்னை கே.கே. நகரில் மகள் பாரதியுடன் வசித்து வருகிறார். 90 வயதை கடந்த அவரை, முதுமை தழுவியுள்ளதே தவிர, வில்லுப்பாட்டு என்றாலே, உற்சாகம் ததும்ப பேசுகிறார். 

மரம் நடுதல் குறித்த பாடலால் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிடம் அன்புப் பரிசை பெற்றவர் . தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளால் கவுரவிக்கப்பட்டவர் வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம். தியாகராஜ பிரம்மம் பாடிய சுப்பு ஆறுமுகம், திருக்குறள், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணியை வில்லுப்பாட்டு வழி எடுத்துரைத்தார்.

வில்லிசை மகாபாரதம்', 'வில்லிசை ராமாயணம்', 'நீங்களும் வில்லுப்பாட்டு பாடலாம்' என 3 நூல்களை எழுதியுள்ளார் சுப்பு ஆறுமுகம். தமிழ் சொற்களை இளைய சமுதாயம் மறந்துவரும் நிலையில்,  எளிமையான, நயமிக்க தமிழ் சொற்கள் மூலம் மக்களிடம் பாடிவந்த கவிஞர் சுப்பு ஆறுமுகத்தையும், வில்லுப் பாட்டையும், கவுரவிக்கும் விதமாக, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது மூலம் மகுடம் சூட்டியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்