அடுத்தடுத்து 21 பெண்கள் கொலை - சீரியல் கில்லரை கைது செய்த போலீசார்

தெலங்கானாவில் 21 பெண்களை கொலை செய்த சீரியல் கில்லரை போலீசார் கைது செய்துள்ளனர்.. கொலைக்கான காரணம் என்ன? கொலையாளியின் நோக்கம் என்ன?
அடுத்தடுத்து 21 பெண்கள் கொலை - சீரியல் கில்லரை கைது செய்த போலீசார்
x
தெலங்கானாவில் 21 பெண்களை கொலை செய்த சீரியல் கில்லரை போலீசார் கைது செய்துள்ளனர்.. கொலைக்கான காரணம் என்ன? கொலையாளியின் நோக்கம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியை சேர்ந்த கவலா அனந்தையா என்பவர் தன் மனைவி வெங்கடம்மாவை காணவில்லை என கடந்த டிசம்பர் 30ஆம் தேதி புகார் அளித்தார். 

இதனிடையே 4 நாட்களுக்கு பிறகு அந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அவரின் சடலம் கிடந்தது. முகம் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்ததால் அவர் கொலை செய்யப்பட்டதும் உறுதியானது. இதன்பேரில் போலீசார் விசாரணணை நடத்தியதில் அது மாயமான வெங்கடம்மா என்பது உறுதியானது. 

இதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போது வெங்கடம்மா ஒருவருடன் ஆட்டோவில் செல்வது தெரியவந்தது. அவருடன் சென்றவர் யார்? என விசாரித்த போது தான் சங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான ராமுலு என்பது உறுதியானது. 

இதையடுத்து அவர் தான் கொலையாளி என்பதை உறுதி செய்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். அப்போது தான் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. 

சிகப்பு ரோஜாக்கள், மன்மதன் படத்தின் காட்சிகளை போல 21 பெண்களை அடுத்தடுத்து கொலை செய்ததாக கூறி, போலீசாரை அதிர வைத்துள்ளார், ராமுலு.

இவரின் கொலைக்கு பின்னணியிலும் சினிமா பாணியில் ஒரு ப்ளாஷ்பேக் இருக்கிறது... 21 வயதாக இருந்த போது ராமுலுவுக்கு திருமணம் நடந்திருக்கிறது. பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம்... ஆனால் சில மாதங்களிலேயே மனைவி, ராமுலுவை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாக தெரிகிறது.. இதனால் பெண்கள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த ராமுலு ஒரு கட்டத்தில் சைக்கோ கில்லராக மாறியிருக்கிறார்....

பெண்களை கண்டாலே கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சுற்றி வந்த அவர், 2003 ஆம் ஆண்டு முதல் கொலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 2019 வரை 16 பெண்களை அவர் கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை ராமுலுவால் கொலையான பெண்களின் மொத்த எண்ணிக்கை மட்டும் 21 என்கிறார் ஐதராபாத் காவல் ஆணையர் அஞ்சனிகுமார்... 

கொலை செய்த பிறகு பெண்களிடம் இருந்து நகை, பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி விடுவதும் ராமுலுவின் வழக்கமாக இருந்துள்ளது... ஒவ்வொரு கொலையின் போதும் கைதாகும் ராமுலு அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்து அடுத்தடுத்து கொலைகளை அரங்கேற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கடைசியாக கைதான வழக்கில் இருந்து தப்பி தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது ராமுலு சிக்கியுள்ளார்.

சீரியல் கில்லர் ராமுலுவை அதிரடியாக கைது செய்த ஹைதராபாத் போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மாயமான பெண்களின் பட்டியலை தயாரித்து வரும் போலீசார், அதை வைத்து ராமுலுவிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். அவரிடம் முறையாக விசாரணை நடத்தினால் பல மர்மங்கள் இந்த வழக்கில் இருந்து வெளியாகலாம்...

Next Story

மேலும் செய்திகள்