"புகை பிடிக்க 21 வயதாக வேண்டும்" - புதிய சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு

நாட்டில் புகை பிடிப்பதற்கான வயதை 18-ல் இருந்து 21 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புகை பிடிக்க 21 வயதாக வேண்டும் - புதிய சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு
x
நாட்டில் பொது இடங்களில் புகை பிடிப்பதை குறைக்கும் நோக்கில், சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் திருத்த மசோதா 2020 என்கிற வரைவு மசோதாவை மத்திய சுகாதார அமைச்சகம் தயாரித்துள்ளது. புகையிலைப் பொருட்கள் விளம்பரம், வர்த்தகம் முறைப்படுத்துதல், உற்பத்தி, விநியோகம் மற்றும் பகிர்வு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.

3 ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு இந்த வரைவு மசோதாவை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. ஏற்கனவே உள்ள சட்டத்தின் உட்பிரிவு 6-ல் திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம், நாட்டில் 21 வயதுக்கு கீழான நபருக்கு சிகரெட்டுகளை விற்பனை செய்வது தடைசெய்யப்படும். 

அதேபோல சிகரெட் பாக்கெட்டாக இல்லாமல் தனியாக சில்லறைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. சில்லறை விலையில் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதால் அவற்றை வாங்குவதில் பொருளாதார ரீதியாக சிக்கல் இல்லா நிலை உள்ளதாகவும், இதனால் மாணவர்களால் கூட சிகரெட்டுகளை வாங்க முடிகிறது என மத்திய அரசு கருதுகிறது. 

மேலும், சில்லறை விற்பனையால், சிகரெட் பாக்கெட்டுகளின் மேல் இடம் பெறும்  எச்சரிக்கையை தவறவிடும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு கண்டறிந்துள்ளது. எனவே,  உட்பிரிவு 7-ல் திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம் சிகரெட் மற்றும் புகையிலை சார்ந்த இதர பொருட்கள் முழுவதும் மூடிய பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய வழிவகை உருவாகும். 

பொது இடங்களில் புகை பிடிப்பதை முற்றிலும் ஒழிக்கும் வகையில், விமான நிலையங்கள், விடுதிகள், ஹோட்டல்கள் போன்ற பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு என்று தனியாக பிரத்தியேக அறைகள் இருப்பதை நீக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதத்தை 200 லிருந்து 2000 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. வயது குறைந்த நபர்களுக்கு சட்டத்தை மீறி சிகரெட் விற்பனை செய்யப்பவர்களுக்கு, தண்டனையை 2 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டாக அதிகரிக்கவும், அபராதத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. வரைவு மசோதா இறுதி செய்யப்படும் நிலையில், விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்