தங்க கடத்தலில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல் - "ஒரு கிலோ தங்கத்திற்கு ஆயிரம் டாலர் கமிஷன்"

அரபு நாட்டு பிரதிநிதிக்கு தெரிந்து தான் தங்க கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கூறியிருக்கும் ஸ்வப்னா, ஒரு கிலோ தங்கத்திற்கு ஆயிரம் டாலர் கமிஷன் கொடுத்ததாக கூறி அதிர வைத்துள்ளார்.
தங்க கடத்தலில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல் - ஒரு கிலோ தங்கத்திற்கு ஆயிரம் டாலர் கமிஷன்
x
கேரள தங்க கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து நிற்கும் சூழலில் தினம் தினம் வெளியாகும் செய்திகள் பலரையும் வளையில் சிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கு முழு உடந்தையாக இருந்தவர் கைதான ரெமீஸ் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கை என்ஐஏ, சுங்கத்துறை, அமலாக்கத்துறை என 3 தரப்பும் விசாரித்து வரும் நிலையில், கைதானவர்களிடம் இருந்து அதிரடியான பல தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ஷரித் ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்த போது வெளியான பல தகவல்கள் அதிர்ச்​சி ரகம். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல உண்மைகளை கொண்டு வந்திருக்கிறது. இந்த கடத்தலின் பின்னணியில் ஹவாலா, கருப்பு பணம் கைமாறி இருப்பதும், இதில் பல விவிஐபிகளும் சிக்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கர்களிலிருந்து ஒன்றரை கோடி ரூபாயும், ஒரு கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை எல்லாமே தங்க கடத்தலில் ஸ்வப்னாவுக்கு கமிஷனாக கிடைத்ததாம். ஸ்வப்னா தனக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இருவரிமும் மேலும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என என்ஐஏ தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரெமீஸ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் துபாயில் தங்கியிருந்த போது நண்பர்களாகி அதன் பின்னரே கடத்தலின் மூளையாக செயல்பட்டுள்ளனர். இவர்கள் போட்டு கொடுத்த திட்டத்தை ஷரித் மற்றும் ஸ்வப்னா தெளிவாக பின்பற்றி கடத்தலை திறம்பட செய்ததாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேநேரம் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஸ்வப்னா கொடி கட்டி பறந்துள்ளார். தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் நிலத்தில் முதலீடு செய்ததாகவும் தெரிவித்துள்ளார் ஸ்வப்னா. தன்னுடைய முதல் திருமணத்தின் போது தன்னிடம் 5 கிலோ தங்கம் கைவசம் இருந்ததாகவும், தன்னுடைய வீட்டின் கட்டுமான பணிக்காக நகைகள் விற்கப்பட்டதாகவும் ஸ்வப்னா கூறியதை சுங்கத்துறை அதிகாரிகள் காதில் வாங்கவே இல்லையாம்... ஒவ்வொரு முறை தங்கம் கடத்தப்படும்போதும் திருவனந்தபுரம் தூதரக அலுவலகத்தை சேர்ந்த அமீரக பிரதிநிதிக்கு தெரிந்து தான் தங்கத்தை கடத்தியதாகவும், ஒரு கிலோ தங்கத்திற்கு ஆயிரம் டாலர் என்ற அடிப்படையில் அவருக்கு கமிஷன் வழங்கப்பட்டு வந்ததாகவும் ஸ்வப்னா உள்ளிட்டோர் விசாரணையின்போது வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால் அமீரக தூதரகத்தில் உள்ள பலரும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். ஏற்கனவே என்ஐஏ விசாரணை முடிவடைந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ஷரித் ஆகியோரை தங்கள் காவலில் ஒப்படைக்க கேட்டு அமலாக்கத்துறையும் கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்