"பணத்தை கொடுத்துவிட்டு பிணத்தை எடுங்கள்" - துக்க வீட்டில் கறார் காட்டிய கடன்காரர்கள்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், கடன் பெற உத்தரவாதம் அளித்த நபரின், பிணத்தை எடுக்கவிடாமல், துக்க வீட்டில் கடன்காரர்கள் தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புங்கனூர் கிராமத்தை சேர்ந்த வெங்கட்ரமணா, தனது உறவினர் ஒருவருக்கு 1 லட்சம் ரூபாய் கடன் வழங்க உத்தரவாதம் அளித்துள்ளார். அந்த நபர் இன்னும் கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், உடல்நலக் குறைவு காரணமாக வெங்கட்ரமணா இறந்துவிட்டார். இதை அறிந்து துக்க வீட்டிற்கு வந்த கடன்காரர்கள், பணத்தை கொடுத்துவிட்டு பிணத்தை எடுங்கள் என கெடுபிடியாக நடந்துள்ளனர். அத்துடன், வெங்கட்ரமணாவின் பெயர் எழுதப்பட்ட செருப்பை மரத்தில் தொங்கவிட்டு, அந்த குடும்பத்தினரை அசிங்கப்படுத்தியுள்ளனர். இரு தினங்களாக நடந்த இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், கடன்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இறந்தவரின் இறுதி சடங்கு நடத்த வழிவகை செய்தனர். கடன் வாங்க உத்தரவாதம் அளித்த ஒரு காரணத்திற்காக, இறந்தவரின் பிணத்தை அடக்கம் செய்யவிடாமல் தடுக்கப்பட்ட சம்பவம், அந்த கிராமமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story