மோடி அமைச்சரவை - யாருக்கு வாய்ப்பு?

பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெற யார், யாருக்கு வாய்ப்பு உள்ளது?
மோடி அமைச்சரவை - யாருக்கு வாய்ப்பு?
x
கடந்த முறை மூத்த தலைவர்கள் மட்டுமல்லாது அனுபவமும் திறமையும் வாய்ந்த இளம் தலைவர்களுக்கும் மோடியின் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தேசிய ஜனநாயக எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அமைச்சர் பதவி குறித்த அதிகாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அனுபவம் வாய்ந்தவர்களுக்கு உரிய இலாகா ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ள ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி  உள்ளிட்டோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அது தவிர, புதிய இளம் எம்பிக்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. பாரதிய ஜனதாவை பொருத்தவரை யார் யாருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்கிற முடிவை மோடி, அமித் ஷா ஆகிய இருவர் மட்டுமே மேற்கொள்கின்றனர்.

கூட்டணிக் கட்சிகளைப் பொருத்தவரை சிவசேனா மற்றும் சிரோன்மணி அகாலி தள் போன்ற கட்சிக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில், தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திர நாத் குமாருக்கு, அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் கட்சியில் மூத்த உறுப்பினர்கள் பலர் இருக்க, முதல் முறை எம்பியான ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கினால், கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தும் நிலவுகிறது. 

கரூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை தோல்வியடைந்துள்ளார். எனவே அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு அளிக்கப்பட்டு, அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே 17- வது மக்களவையில், மோடியின் அமைச்சரவை என்பது, மூத்த உறுப்பினர்கள் மற்றும் இளம் உறுப்பினர்களைக் கொண்ட கலவையாக இருக்கும் என்று பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்