சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த சன்னி தியோல்

இந்தி பட நடிகரான சன்னி தியோல் பாஜகவுல சேர்ந்த நிலையில அவருக்கு பஞ்சாப்ல போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பு கொடுத்திருக்கு.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த சன்னி தியோல்
x
பாலிவுட்டின் ஆக்‌ஷன் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் சன்னி தியோல். தயாரிப்பாளர், இயக்குநர் என பல முகங்கள் கொண்ட இவர் தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகளை பெற்றவர்.

இவரின் தந்தை தர்மேந்திராவும் பிரபல நடிகரே. சினிமாவில் இருந்து கொண்டு அரசியல் மீது ஆர்வம் கொண்ட தர்மேந்திரா, பாஜகவில் சேர்ந்து 2004ல் ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் தொகுதியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியும் சன்னி தியோலின் சித்தியும், நடிகையுமான ஹேமமாலினி பா.ஜ.க.வின் மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

தந்தையை போலவே மகன் சன்னி தியோலுக்கும் அரசியல் ஆர்வம் தொற்றிக் கொண்டது எதிர்பார்த்தது தான். இதற்கு அச்சாரம் போடும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் புனே விமான நிலையத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசினார் சன்னி தியோல். இதனை உறுதி செய்யும் விதமாக அண்மையில் பாஜக அலுவலகத்திற்கு சென்ற சன்னி தியோல், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். வாஜ்பாய்க்கு பிடித்த ஒரு நபராக தனது தந்தை தர்மேந்திரா இருந்ததாக கூறிய சன்னி தியோல், மோடிக்கு பிடித்த ஒரு நபராக தான் இருப்பேன் எனவும் உறுதியாக சொல்லியிருக்கிறார். 

கட்சியில் சேர்ந்த சன்னி தியோலை உடனே களமிறக்கி இருக்கிறது பாஜக. சன்னி தியோலின் பூர்வீக மாநிலமான பஞ்சாப்பில் உள்ள குருதாஸ்பூர் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டு இருக்கிறார்.

குருதாஸ்பூர் தொகுதியில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார் நடிகர் வினோத் கன்னா. 2017-ல் வினோத் கன்னா மறைந்த பின்னர் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மீண்டும் அந்த தொகுதியை கைப்பற்றவே சன்னி தியோலை களம் இறக்கி இருக்கிறது பாஜக.. நடிகர்கள் அந்தஸ்து கொண்ட தொகுதியாக உள்ள குருதாஸ்பூரில் சன்னி தியோலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சியினரை உற்சாகமடைய வைத்திருக்கிறது. சினிமாவில் சாதித்த சன்னி தியோலுக்கு அரசியல் எப்படி கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.... 


Next Story

மேலும் செய்திகள்