காட்சிகளின் கதாநாயகன் பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் மரணம்

தமிழ்த் திரை உலகின் முன்னணி இயக்குநர் கே.வி. ஆனந்த், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் திரை உலக பயணத்தைப் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு....
காட்சிகளின் கதாநாயகன் பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் மரணம்
x
தமிழ் சினிமாவில் காட்சிகளை கட்டமைத்து கதை சொல்லிய இயக்குநர், கே.வி. ஆனந்த்....சென்னை பழவேற்காடுப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட கே.வி. ஆனந்த்,  தனது சிறுவயது முதல் புகைப்படம் எடுப்பதில் தீராத ஆர்வம் கொண்டவர்.தனது ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு தமிழ் பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக பணியாற்றிய கே.வி. ஆனந்த், விதவிதமான கோணங்களில், புகைப்படம் எடுப்பதில் தேர்ந்தவர்..தான் எடுத்த புகைப்படங்கள் மூலமே செய்திகளை வெளிக்கொணர்ந்த கே.வி. ஆனந்துக்கு, திரைத்துறை மீதும் அதீத ஆர்வம் இருந்தது. திரைத்துறையில் களமாட காத்திருந்த கே.வி. ஆனந்துக்கு, பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் கைகொடுத்தார். அவரிடம் உதவியாளராக சேர்ந்து, திரைத்துறையிலும் அடியெடுத்து வைத்தார் கே.வி. ஆனந்த்...கடந்த 1994-ஆம் ஆண்டு, "தென்மாவின் கொம்பத்" எனும் மலையாளப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பை கே.வி. ஆனந்துக்கு, பி.சி.ஸ்ரீராம் வாங்கித் தந்தார்.எதிர்பாராமல் கிடைத்த இந்த வாய்பை கட்சிதமாக கைப்பற்றிக் கொண்ட கே.வி. ஆனந்த், அந்த படத்தில் சிறப்பான ஒளிப்பதிவை வெளிப்படுத்தி, தேசிய விருதையும் தட்டிச் சென்றார். பிரபலம் அடைந்த கே.வி. ஆனந்த், இந்தி, தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். காதல் தேசம் படம் மூலம் தமிழ்த்திரை உலகின் கதவை தட்டிய கே.வி. ஆனந்த், பிரபல இயக்குநர் ஷங்கருடன் முதல்வன், சிவாஜி ஆகிய வெற்றிப் படங்களில் ஒளிப்பதிவாளராக கூட்டணி அமைத்தார். தொடர்ந்து ஒளிப்பதிவே செய்துவந்த கே.வி. ஆனந்த்,  2005-ஆம் ஆண்டு 'கனா கண்டேன்' என்ற படத்தை இயக்கி, இயக்குநராகவும் பரிணமித்தார். பெரிதளவு வெற்றியை இந்தப் படம் தராவிட்டாலும், 4 ஆண்டுகள் காத்திருந்து, சூர்யாவை வைத்து அயன் படத்தை இயக்கினார் கே.வி. ஆனந்த்...கதை ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை இந்தப் படம் அவருக்குப் பெற்றுத் தந்தது. பன்னாட்டு கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம், ஹாலிவுட் ரேஞ்சுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.இதன்பின்னர், ஜீவாவை வைத்து அவர் இயக்கிய கோ படம், பலராலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து அவர் இயக்கிய மாற்றான், அனேகன் ஆகிய பாடங்களும் பட்டையைக் கிளப்பிய நிலையில், அவருக்கான ரசிகர் பட்டாளம் விரிந்து கொண்டே சென்றது.அனேகன் படத்தில், அந்தக் கால பர்மாவை, அச்சுப் பிசகாமல் காட்சிப்படுத்தி, பர்மாவில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை கண்முன்கொண்டு வந்து நிறுத்தினார் கே.வி. ஆனந்த்.கவண், காப்பான் உள்ளிட்ட வெற்றிப் படங்களையும் அவர் இயக்கி இருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.தடுப்பூசி செலுத்தி இருந்தபோதும், கடந்த 24-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.




Next Story

மேலும் செய்திகள்