அஜித்தை படமெடுத்ததால் வேலையிழந்த பெண் - விளையாட்டாக எடுத்த வீடியோ வினையானது

நடிகர் அஜித் மேலாளர் மீது பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். பின்னணி என்ன என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
அஜித்தை படமெடுத்ததால் வேலையிழந்த பெண் - விளையாட்டாக எடுத்த வீடியோ வினையானது
x
பிரபல நடிகர்கள் பொது இடங்களுக்கு வந்தாலே ரசிகர்களின் செல்போன் கேமராவில் இருந்து தப்பிக்க முடியாது. அதிலும் குறிப்பாக... அஜித்! வில் வித்தை போட்டிக்கு வந்தாலும் சரி... வாக்களிக்க வந்தாலும் சரி... அஜித்தை படம் பிடிக்கவென்றே ஒரு தனி ரசிகர் பளட்டாளம் வந்துவிடுகிறது. இப்படித்தான் கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா ஊரடங்கின் போது நடிகர் அஜித் தன் மனைவியுடன் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது மருத்துவமனை பணியாளர்களில் ஒருவரான பர்சானா என்பவர் அஜித்துடன் செல்பி எடுத்ததோடு அவர் மருத்துவமனைக்கு வருவதை வீடியோவாகவும் எடுத்திருக்கிறார். பர்சானா படம் பிடித்த போதே அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் செல்போனை பறித்திருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் இதை பரப்பக்கூடாது என எச்சரித்துதான் அதை திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், எப்படியோ வீடியோ கசிந்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவிட்டது. அஜித் உடல் நிலை பற்றி பலரும் கண்டபடி பேச இந்தக் காட்சி வித்திட்டதால் பர்சானாவை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. பின்பு பர்சானா அஜித்தின் மனைவி ஷாலினியை தன் தோழி மூலம் போனில் அழைத்து உதவி கேட்டிருக்கிறார். ஷாலினியின் பரிந்துரையால் மீண்டும் மருத்துவமனை நிர்வாகம் பர்சானாவுக்கு வேலை கொடுத்ததாகவும் பின்னர் வேறொரு ஒழுங்கு நடவடிக்கையால் அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. பணியாற்றிய நிறுவனத்தில் 80,000 ரூபாய் வரை பர்சனல் லோன் வாங்கியிருக்கிறார் பர்சானா. அந்த கணக்கை முடித்த பிறகே அவருக்கான சான்றிதழை தர முடியும் என மருத்துவமனை நிற்வாகம் சொல்லி விட்டதாகத் தெரிகிறது. இதனால் வேறு வேலையும் தேட முடியாமல் கொரோனா கால கட்டத்தில் வருமானமின்றி கஷ்டப்பட்டிருக்கிறார் பர்சானா. 
நடிகர் அஜித்தை நேரில் பார்த்து இதையெல்லாம் சொல்லி உதவி கேட்க நினைத்திருக்கிறார் அவர். அதற்காக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் தொடர்ந்து அவர் கோரிக்கையும் வைத்திருக்கிறார்.  அந்த முயற்சி பலிக்காமல் போனதால் விரக்தியின் விளிம்புக்குப் போன பர்சானா, கடந்த ஏப்ரல் 1ம் தேதி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார். தற்போது அவர் அஜித்தை சந்திக்க வைப்பதாக சொல்லி நம்பிக்கை மோசடி செய்ததாக சுரேஷ் சந்திரா மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மருத்துவமனை என்பது ரகசியம் காக்கப்பட வேண்டிய இடம். அங்கே ஒரு நடிகரை படம் எடுத்து ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டியது எந்த விதத்தில் பார்த்தாலும் தவறுதான். அதற்கான விளைவுகளுக்கு அஜித்தோ அவரைச் சார்ந்தவர்களோ நிச்சயம் பொறுப்பாக முடியாதுதான். பணியிடத்தில் கடன் வாங்கியிருப்பவர்கள் மற்றவர்களை விட கூடுதல் பொறுப்புணர்வோடு இருந்திருக்க வேண்டியதும் கட்டாயம்தான். இப்படி எல்லா விதத்திலும் கோட்டை விட்டு நிற்கும் இந்தப் பெண்... சினிமா ரசிகை என சொல்லிக் கொள்பவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம்தான்!

Next Story

மேலும் செய்திகள்