ஈரான், ஆப்கன் உள்ளிட்ட 12 நாடுகளின் பயணிகளுக்கு டிரம்ப் தடை
ஈரான், ஆப்கானிஸ்தான் உட்பட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட் Chad, காங்கோ குடியரசு, மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைத்தி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதேபோல், பகுதியளவு தடை செய்யப்பட்ட நாடுகள் பட்டியலில் புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா ஆகியவை இடம்பெற்றுள்ளன. பயங்கரவாத ஆதரவு, சட்டவிரோத குடியேற்றம் உள்ளிட்டவை இந்த கட்டுப்பாடுகளுக்கு காரணம் என, வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர் விசாக்களை நிறுத்தி வைப்பதற்கான பிரகடனத்திலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.