பாலம் திறக்காமலேயே பாலத்தை கடக்க முடியும்!! யாரும் அறியா பாம்பனின் பிரம்மிக்க வைக்கும் அம்சங்கள்

Update: 2025-04-06 08:22 GMT

பாம்பன் ரயில் பாலம்... தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று. இந்திய பெருநிலப்பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் பாலம், ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா - இலங்கை இடையே போக்குவரத்தை தொடங்கும் திட்டத்தில் உதித்தது.

1913-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் கடல் ரயில் பாலம் 1914 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. பாலத்திற்கு மத்தியில் கப்பல் செல்வதற்காக கத்திரி வடிவில் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது.

பல்வேறு இயற்கை சீற்றங்களை தாண்டி நூற்றாண்டுக்கு மேலாக செயல்பாட்டில் இருந்த பாலத்தில், அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டது மட்டுமின்றி பாலத்தில் விரிசல் விழுந்ததாலும் புதிய பாலம் கட்டும் பணிகள் 2019 ஆம் ஆண்டு தொடங்கியது.

கப்பல் செல்லும் தூக்குப்பால பகுதியில் ரயில் செல்லும் போது அதிர்வுகள் இருப்பது கண்டறியப்பட்டது. பிறகு ஆய்வு செய்யப்பட்டு 2022 ஆம் ஆண்டு பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

அதேவேளையில் பழைய பாலத்திற்கு அருகாமையிலேயே புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் 535 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாலம் பயன்பாட்டுக்கு வருகிறது. பாலம் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது.

புதிய ரயில் பாலம் பாலம் 2 ஆயிரத்து 78 மீட்டர் நீளம் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரம் கொண்டது. 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்களும், 99 இணைப்பு கர்டர்களையும் கொண்டது.

லண்டன் டவர் bridge வடிவில் கட்டப்பட்டிருக்கும் பாலத்தில் நாட்டிலேயே முதல் செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

செங்குத்து தூக்குப் பாலத்தின் உயரம் 27 மீட்டராகும். நீளம் 77 மீட்டராகும். ஆயிரத்து 470 டன் எடையுள்ள நான்கு இரும்பு தூண்களில் 650 டன் எடையில் தூக்குப்பாலம் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இது நான்கு புறமும் உள்ள இரும்பு ரோப்களில் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 இரும்பு ரோப்கள் செங்குத்து தூக்குப்பாலத்தை பிடித்திருக்கிறது.

வின்ச் மோட்டார் தொழில்நுட்பத்தில் தூக்குப்பாலம் 17 மீட்டர் உயரத்தில் மேலே உயர்த்தப்படும். இயந்திரத்தில் இயக்குவதால் ஐந்து நிமிடத்தில் உயர்த்தி இறக்க முடியும்.

ரயில் இயங்கும் மின்வயர் இணைப்புகள் உயர்த்தி இறக்கும்போது தானாக இணைப்பில் இருந்து விலகும். சிறிய படகுகள் பாலம் திறக்காமலேயே கடந்து செல்லலாம். தூக்குப்பாலம் உச்சிக்கு செல்ல லிப்ட் வசதி இருக்கிறது.

பாலம் அருகே 2 மாடி கட்டடத்தில் ஆப்ரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்கான அறைகள் கட்டப்பட்டுள்ளன.

புதிய ரயில் பாலத்தின் கான்கிரீட் தூண்களின் மேலே மொத்தம் 99 இணைப்பு இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இரும்பு கட்டுமான பணிக்கு துருப்பிடிக்காத எஃகு உலோகம், உப்புக்காற்றில் துருப்பிடிக்காத வகையில் பெயின்ட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.  

Tags:    

மேலும் செய்திகள்