மே ஒன்றாம் தேதி முதல், ஜிபிஎஸ் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் குறித்து, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும் அல்லது நெடுஞ்சாலை ஆணையமும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. அதே நேரத்தில், வாகனங்கள் தடையின்றி இயக்கவும், பயண நேரத்தை குறைக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் மட்டும் ‘ANPR-FASTag-அடிப்படையிலான தடையற்ற கட்டண முறை செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. இது, ‘தானியங்கி எண் தகடு அங்கீகாரம்’ தொழில்நுட்பத்தையும், சுங்கக் கட்டணத்தை வசூலிக்க ரேடியோ-அதிர்வெண் அடையாளத்தை பயன்படுத்தும் தற்போதைய ‘FASTag அமைப்பையும் இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களிடம் கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.