கடலூர் ரயில் கோரம்.. "நிவாரணம் கொடுத்தா என் பையன் வந்துருவானா?" - மாணவனின் தந்தை
கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் மூன்று பள்ளி மாணவ மாணவிகள் உயிரிழந்த நிலையில் மாணவன் உட்பட 3 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சாருமதி மற்றும் அவரது சகோதரன் செழியன் ஆகியோர் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல் சின்ன காட்டுசாகை பகுதியில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மற்றொரு குடும்பத்தை சேர்ந்த விஷ்வேஷ் மற்றும் நிமலேஷ் ஆகியோர் இந்த ரயில் விபத்தில் காயம் அடைந்த நிலையில் நிமலேஷ் உயிரிழந்தார். நிமலேஷ் பிரேத பரிசோதனை நேற்று நிறைவடைந்த நிலையில் விஷ்வேஷ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் உடலை இன்று பெற்றுக் கொள்வதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த விஷ்வேஷ் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சகோதரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அவர் தற்காலிகமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் பெற்றோர்களிடம் நிமலேஷ் உடல் ஒப்படைக்கப்பட்டது. நிமலேஷ் உடல் கடலூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அங்கு இருந்த மக்கள் கதறி அழுதனர். மேலும் தொண்டமாந்த்தம் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இறந்த மாணவ மாணவிகளுக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமாக இரண்டாவது நாளாக உயிரிழந்த மாணவ மாணவிகள் படித்த தனியார் பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.