ஆசை ஆசையாய் பெற்ற குழந்தை.. இரவு பகலாக கதறி துடிக்கும் பிஞ்சு - குடும்பமே கண்ணீர் விடும் துயரம்..
சென்னையில் 10 மாத ஆண் குழந்தை இரண்டு சிறுநீரகம் செயலிழந்து உள்ள சூழலில், தங்கள் குழந்தையை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என குடும்பமே கண்ணீர் விடும் துயர பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த அஜித்குமார் மற்றும் அவரது மனைவிக்கு கடந்த பிப்ரவரி மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது..
குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுத்தது குழந்தையின் உடல்நிலை...
குழந்தை பிறந்த சில நாட்களிலேயே, உடல் உபாதைகள் ஏற்பட்டு அவதியடைந்து வந்துள்ளது...
இதனால் பதறிய பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, பிஞ்சு குழந்தையின் இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்...
இந்த செய்தி பெற்றோருக்கு பேரிடியாய் இறங்க குழந்தையை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என போராடி வருகின்றனர்...
அரசு மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை தரப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டும் அவர்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட சூழலில், போதிய பொருளாதார வசதியில்லாததால் செய்வதறியாது தவிக்கின்றனர்...
குழந்தைக்கு தினந்தோறும் டயாலிசிஸ் செய்து வரப்படும் நிலையில், சிரித்து விளையாட வேண்டிய குழந்தை தினம் தினம் கதறி அழுது துடிப்பது காண்போரையும் கலங்கச் செய்தது...
இதுவரை மேற்கொண்ட சிகிச்சைக்கே 4 முதல் 5 லட்சம் செலவாகியுள்ள சூழலில், அரசாங்கம் தான் உரிய உதவி செய்ய வேண்டும் என கண்கலங்குகிறார் தாயார் பானுப்பிரியா...
டயாலிசிஸ் சிகிச்சை முடிந்து குழந்தை சரியான எடையை எட்டியதும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய சூழலில், பானுப்பிரியாவின் தாயார் தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்துள்ளார்.
ஆனால் நிதி இல்லாமல் திணறுவதாக தழுதழுக்கும் குரலில் கூறிய அவர், தனது உயிரைக் கூட கொடுக்கிறேன் பேரனை காப்பாற்றுங்கள் என உருக்கத்துடன் கூறியது கண்கலங்கச் செய்தது..
பணமின்றி போராடும் இக்குடும்பத்தினரின் துயரையும், வலியுடன் 1கதறித் துடிக்கும் குழந்தையின் அழுகையையும் துடைக்க உதவிக்கரங்கள் நீளுமா.... ? என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் குடும்பத்தினர்..