வாடகை ஆட்டோ ஓட்டும் அப்பா..ரூ.50 லட்சத்தை பாக்கெட் செய்த மகள் - உலக அரங்கில் உயர்ந்துநின்ற தமிழ்நாடு
என் பெற்றோர்கள் இல்லை என்றால் நான் இல்லை ..என்னை விட அவர்கள் தான் எனக்காக மிகவும் கஷ்டப்பட்டனர் என 12ம் வகுப்பு மாணவி கூறியது பெற்றோர்களை நெகிழ வைத்திருக்கிறது.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் உலக கேரம் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மாணவிகள் கலந்து கொண்டு விருதுகளை அள்ளியிருக்கிறார்கள். இதில் சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான கல்லூரி மாணவி காசிமா தனிநபர், இரட்டையர் பிரிவு, குழு போட்டி மூன்றிலும் தங்கத்தை வென்று சாம்பியன் ஆனார்.
இவரைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 12 ம் வகுப்பு பள்ளி மாணவி மித்ரா இரட்டையர் மற்றும் குழு போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்.
மதுரை மணிநகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜயபாஸ்கர்-அனிதா தம்பதி. இவர்களுடைய மகள் மித்ரா சிம்மக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். விஜயபாஸ்கர் ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.
மித்ராவுக்கு 10 வயதில் விளையாடுவதற்காக கேரம் போர்டை வாங்கி கொடுத்து இருக்கிறார் அவரின் தந்தை விஜய பாஸ்கர். ஆனால் அவர் அன்று யோசித்துக் கூட பார்த்து இருக்க மாட்டார் அவர்களுடைய வாழ்வையே உயர்த்தும் திறமை அந்த போர்டில் ஒளிந்து இருக்கிறது என்று...
மித்ரா சாதாரணமாக விளையாடத் தொடங்கிய கேரம் போர்டில் அபார திறமைகளைப் பெற்றார். மகளின் திறமையைக் கண்ட தந்தை மகளுக்காகக் கஷ்டப்பட்டு உழைத்து அவருக்குச் சிறந்த பயிற்சிகளை அளித்து இருக்கிறார்.இதனால் 12 வயதில் மாவட்ட அளவில் தொடங்கி தேசிய அளவில் சாம்பியன் ஆனார். தொடர்ந்து அடுத்தடுத்து விருதுகளை வாங்கி குவித்த மித்ரா உலக கேரம் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
உலக அளவில் போட்டி நடைபெறும் அமெரிக்காவுக்குச் செல்ல பணம் இன்றி கடன் வாங்கிய போது, தமிழக அரசு மித்ராவின் திறமைகளைப் பார்த்து அவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை போட்டியில் பங்கேற்பதற்காக வழங்கியது அவர்களுக்கு உத்வேகம் அளித்து இருக்கிறது...
இரு தங்க விருதைக் குவித்த மித்ராவுக்கு தமிழ அரசு சார்பில் ரூ 50 லட்சம் பரிசாக அளிக்கப்பட்டிருப்பது அந்த குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது
திறமைகள் ஒருபோதும் கைவிடாது என்பதற்குப் பல சாதனைகளும் சாதனையாளர்களும் வரலாற்றில் இடம் பெற்றுள்ள நிலையில் அதில் தங்கமாகத் திகழ்கிறார் மித்ரா..