- தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 446 பணியிடங்களை நிரப்புவதற்கான, குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலை தேர்வு, கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது.
- இதில் தேர்ச்சி பெற்ற 57 ஆயிரத்து 641 பேருக்கு, முதன்மைத் எழுத்து தேர்வு சென்னை உட்பட 20 மாவட்டங்களில் 186 மையங்களில் நடைபெற்றது.
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவுரைப்படி தேர்வு எழுத வருபவர்கள் காலை 9 மணிக்குள் வர வேண்டும். அதற்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
- கட்டாய தமிழ் மொழி தகுதித்தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், வினாத்தாள்களில் பதிவு எண்கள் மாறி மாறி இருந்ததால், தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர்.
- இதனால் தேர்வர்கள் அறை கண்காணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பும் ஏற்பட்டது.
- இதனால், பல்வேறு மையங்களில் தேர்வு தாமதமாகவே தொடங்கியது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட விளக்கத்தில், வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
- இந்த குழப்பம் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், காலதாமதத்தை ஈடுசெய்யும் வகையில் 1.30 மணிக்கு நடைபெற இருந்த மதிய தேர்வு 2.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை நடைபெறும் எனவும் அறிவித்தது.
- வினாத்தாள் குளறுபடி குறித்து பேசிய தேர்வர்கள், பதற்றத்தில் எழுதியதாகவும், இனி வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் வாரியம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.