#Breaking || ஜல்லிக்கட்டு பலி 5ஆக உயர்வு.. சோர்வில் அமர்ந்த வீரரின் வலது கண்ணை பதம் பார்த்த காளை.. துடிதுடித்து அடங்கிய உயிர்..!

கரூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பலத்த காயமடைந்த வீரர், சிகிச்சை பலனின்றி சற்று முன் உயிரிழந்தது சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Update: 2023-01-18 03:21 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு ஆரம்பித்த போட்டியில் 787 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 362 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர். அதில் ஒருவர் தான் 21 வயதான இளைஞர் சிவக்குமார். இவர் வடசேரி பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர்.



முதல் சுற்றில் பல காளைகளுடன் மல்லுக்கட்டிய சிவக்குமார், 2ம் சுற்றில் சற்று சோர்வடைந்துள்ளார். இதனால் தடுப்பு வேலியின் ஓரமாக அமர்ந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வந்த காளை ஒன்று, சிவக்குமாரை கொடூரமாக முட்டி தள்ளியுள்ளது. வலது கண்ணில் கொம்பு குத்தியதால், பார்வையே பறிபோயுள்ளது. களத்திலேயே சரிந்த அவரை, உடனே சக வீரர்கள் தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றினர்.




 


திருச்சி அரசு மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. இளைஞரின் இழப்பு கரூர் மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் பார்வையாளர்கள் 18 பேரும் காளைகளின் உரிமையாளர்கள் 16 பேரும் வீரர்கள் 25 பேரும் காயமடைந்துள்ளனர்.



கடந்த 3 நாட்களாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் 2 பார்வையாளர்கள் 3 வீரர்கள் என 5 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஜன.16ம் தேதி பாலமேட்டில் 9 காளைகளை அடக்கி உயிரிழந்த வீரர் அரவிந்த்தின் மரணம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் நேற்று நடந்த சிராவயல் மஞ்சுவிரட்டில் வீரர் ஒருவர் பார்வையாளர் ஒருவர் என இருவர் காளைகள் குத்தி பரிதாபமாக பலியாகினர். பல ஊர்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மொத்தமாக 450க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்