மின் கட்டணத்தை உயர்த்த போராட்டமா? - திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி கேள்வி
மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டாலின் போராட்டம் நடத்த விரும்புகிறாரா? என மின்துறை அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.;
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றமே ஏற்றுக் கொண்ட மின் கட்டண கணக்கீட்டு முறையை குளறுபடி என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்று ஆர்.எஸ்.பாரதியும் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். முரண்பட்ட கருத்துக்கள் தி.மு.க.வின் முரண்பாடான அரசியலை காட்டுகிறது என்று கூறியுள்ள அமைச்சர் தங்கமணி, அரசு வழங்கும் மின் சலுகைகளை மறைத்து பிற மாநிலங்களின் சிறிய சலுகைகளை கூறுவதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் தான் வீட்டு உபயோக மின் கட்டணம் மிக மிக குறைவு என்றும் மின்வாரிய செலவுகளை ஈடுகட்ட ஆண்டுக்கு 2 ஆயிரத்து 878 கோடி ரூபாய் அரசு வழங்கி வருகிறது என்றும் விளக்கம் அளித்துள்ளார். அதிக கட்டணம் வசூலிக்கும் மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களை ஸ்டாலின் மேற்கோள் காட்டுவது ஏன் எனவும் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.