"வழக்கை கைவிட்டால் ரவுடி பட்டியலில் இருந்து பெயரை நீக்க வேண்டும்"- உயர்நீதிமன்ற மதுரை கிளை
வழக்கை கைவிட்டாலோ, ரத்து செய்யப்பட்டாலோ சம்பந்தப்பட்ட நபரின் பெயரை உடனடியாக ரவுடி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.;
ரவுடி பட்டியலில் உள்ள தங்களது பெயரை நீக்க கோரி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை
தாக்கல் செய்திருந்தனர்.அவற்றை விசாரித்த நீதிபதி சேஷசாயி ரவுடி பட்டியலில் ஒருவரது பெயரை சேர்க்க வேண்டுமென்றால், அதற்கு போதுமான காரணங்கள் இருக்க வேண்டும் என்றும் , அதற்கான வழிகாட்டுதல்கள்
பின்பற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். முதல் குற்றம் புரிந்தவரை ரவுடி பட்டியலில் சேர்க்க கூடாது என்றும், வழக்கோ, விசாரணையோ நிலுவையில் இருக்கும் போதும் சேர்க்க கூடாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
வழக்கை கைவிட்டாலோ, இறுதி அறிக்கையில் குற்றசாட்டு முகாந்திரம் இல்லா விட்டாலோ, வழக்கு ரத்து செய்யப்பட்டாலோ உடனடியாக ரவுடி பட்டியலில் இருந்து பெயரை நீக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக 6 மாதத்திற்கு ஒரு முறை டிஜிபி தரப்பில் அறிக்கையளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இதனை முறையாக பின்பற்ற
அனைத்து அதிகாரிகளுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டு என்றும் உத்தரவிட்டார்.