அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாள் : அர்ச்சகர்கள் திடீர் புறக்கணிப்பு - பரபரப்பு

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாளான இன்று, அர்ச்சகர்கள் திடீரென புறக்கணிப்பு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-07-17 06:13 GMT
அத்திவரதர் கோவிலின் பூஜைகளுக்காக காலையில் பணிக்கு செல்ல இருந்த அர்ச்சகர்களை, சிறப்பு வரிசையில் செல்லாமல், பொதுமக்களின் வரிசையில் செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனர். இது தங்களை அவமானப்படுத்தும் விஷயம் என்று கூறி அர்ச்சகர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உள்ளே இருந்த அர்ச்சகர்களும் தங்களது பூஜைகளை புறக்கணித்து விட்டு வந்து வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜீவ், ஏஎஸ்பி ராஜேஷ் கண்ணா, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, இதுபோல் இனிமேல் நடக்காது என்று உறுதியளித்தனர். இதை அடுத்து, அர்ச்சகர்கள் சமாதானம் ஆகி சென்றனர். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இந்த பிரச்சினையால், சுமார் 1 மணி நேர தரிசனம் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.   
Tags:    

மேலும் செய்திகள்