நீண்ட இரவு... விடியலுக்காக காத்திருந்த திருமா...சிதம்பரத்தில், நள்ளிரவு வரை வெளிவராத வெற்றி நிலவரம்...

சிதம்பரம் மக்களவை தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெற்ற வெற்றி, அங்குலம் அங்குலமாக சாத்தியமானது.

Update: 2019-05-24 07:39 GMT
38 மக்களவை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டபோது, திமுக கூட்டணி அதீத பாய்ச்சலுடன் முன்னணி வகித்தது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் மக்களவை தொகுதி வாக்குகள் மட்டும் வானில் பூத்த நட்சத்திரமாய் எண்ணப்பட்டுக் கொண்டே இருந்தன. சனாதனத்தை வேரறுப்போம், சாதியற்ற சமூகத்தை சாத்தியமாக்குவோம் என்ற கொள்கையோடு, அரசியல் நடத்திவரும் திருமாவளவன், கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் எல்லோரின் பார்வையும் சிதம்பரம் தொகுதி மீதே படிந்திருந்தது.  

அரசுப் பணியை துறந்து, 1999ஆம் ஆண்டு தேர்தல் அரசியலுக்கு வந்த திருமாவளவன், ஜி.கே.மூப்பனார், கருணாநிதி, ஜெயலலிதா என்ற ஆளுமைகளுடன் பயணித்து எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளை ஏற்கனவே அலங்கரித்தவர். ஆனால், அடுத்தடுத்து சறுக்கலும், அடியும் விழ தவறவில்லை. கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை விட்டு விலகி இருந்த திருமாவளவன், சனாதனத்தை வேரறுப்போம் என்ற முழக்கத்துடன் திருச்சியில் நடத்திய மாநாடு மூலம், ஆற்றைச் சேர்ந்த வாய்க்கால் நீராக திமுக கூட்டணியில் இணைந்தார்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில்  சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் களமிறங்கினார் திருமாவளவன். வாக்கு எண்ணப்பட்டபோது, முதல் சுற்று முதல் முன்னிலையும், பின்னடைவும் என மாற்றம் நடந்துகொண்டே இருந்தது. தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என கணிக்கப்பட்ட சூழலில் உதய சூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் வெற்றி எளிதாகக் கூட சாத்தியமாகி இருக்கலாம். ஆனால், ஏற்கனவே கையில் இருந்த சின்னமான மோதிரம் கழன்று போனதால் புதிய அடையாளமான பானை சின்னத்தில் களம் கண்டார். 

தமிழகம் தாண்டியும் கவனத்தை ஈர்த்த சிதம்பரம் தொகுதியில், நள்ளிரவை கடந்து வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நீண்ட இழுபறி இருந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தனி தொகுதியில் கூட எல்லோரையும்போல வெற்றி அவ்வளவு சுலபம் இல்லை என இயக்குனர் ரஞ்சித், சிதம்பரம் என்றாலே ரகசியம்தானோ? என எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யா உள்ளிட்ட பிரபலங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் கொட்டிக்கொண்டே இருந்தனர். 

திக் திக் நிமிடங்களாக தொடர்ந்த திருமாவளவனின் இரவு அதிகாலை 2 மணிக்கு விடியலாக மாறியது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரைவிட 5 லட்சத்து 229 வாக்குகளுடன் திருமாவளவன் வெற்றி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சிதம்பரம் தொகுதி மக்களுக்கு வெற்றியை காணிக்கை ஆக்குவதாக கூறிய திருமாவளவன், தமிழகம் எப்போதும், மாற்று திசையில் பயணிக்கும் என்பதை நிரூபித்துள்ளதாக கூறினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனின் ஆதரவாளர்கள், தலித் அல்லாதோர், இந்துக்கள், சிறுபான்மை சமூகத்தினர் என அனைத்து தரப்பினரின் வாக்குகளும் திருமாவளவனின் வெற்றியை சாத்தியமாகியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்