பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு, இன்று காலை நடைபெற்றது.

Update: 2019-04-19 02:21 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின், உலக பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர், ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது. மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து, இன்று காலையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. இதற்காக, வைகையாற்றில் கடந்த 3 நாட்களாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முன்னதாக, அழகர் மலையில் இருந்து புறப்பட்டு தல்லாகுளத்தில் தங்கி இருந்த கள்ளழகர், பச்சைப்பட்டு உடுத்தி, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து தங்க குதிரை வாகனத்தில் வலம் வந்தார். 

கள்ளழகருடன் வீரராகவ பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத் தொடர்ந்து, தல்லாகுளத்தில் இருந்து வைகை நதி நோக்கி சென்ற அழகரை வழி நெடுகிலும் பக்தர்கள், பக்தி பரவசத்துடன் வரவேற்று தரிசித்தனர். அதன்பிறகு, வைகை ஆற்றில் காலை 6 மணி அளவில் கள்ளழகர் இறங்கினார். அப்போது, நதிக்கரையோரம் குவிந்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பி கள்ளழகரை தரிசனம் செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்