ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம்

மெரினா கடற்கரையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Update: 2019-01-23 06:37 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, 50 கோடி ரூபாய் செலவில், தமிழக அரசு நினைவிடம் கட்டி வருகிறது. இந்நிலையில், இதற்கு தடை கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார். சொத்து வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றவர் என்றும், கடலோர ஒழுங்கு முறை மண்டல விதிகளுக்கு மாறாக மெரினாவில் நினைவிடம் கட்டப்படுவதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்ய நாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதங்களை முன் வைத்தார். சொத்து வழக்கின் தீர்ப்பிற்கு முன்னதாக, ஜெயலலிதா மறைந்து விட்டார் என்பதால், தீர்ப்பை கைவிடுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்ததையும், அவர் தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல என்றும் தெரிவித்தார். நினைவிட கட்டுமான பணிகள் நிறைவடைந்து, மார்ச் மாதம் திறப்பு விழாவிற்கு தயாராகி உள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதனையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல என்பதால், மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர். எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரம் அரசிற்கு இருந்தாலும், கல்வி, மருத்துவ வசதிகளுக்கு முன்னுரிமை மற்றும் முக்கியத்துவம் அளிக்க அறிவுறுத்துவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்