உலக உணவு தினம் இன்று : நாம் சாப்பிடும் உணவு பாதுகாப்பானது தானா..?

உலக உணவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் நோய்களை விரட்டும் உணவுகள் என்ன? என்ற கேள்விக்கு தீர்வு சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Update: 2018-10-16 13:27 GMT
மனிதனின் அடிப்படை தேவைகளில் பிரதான இடம் பெற்றிருக்கிறது உணவு.. பொருளாதார தேவை காரணமாக வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்பவர்களுக்கும் சரி, ருசிக்காக கடைகளில் உணவை வாங்கிச் சென்று சாப்பிடுவோருக்கும் இன்று தரமான உணவு என்பதே கேள்விக்குறியாக உள்ளது. 

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்ட நம் முந்தைய தலைமுறை 80 வயதுகளை கடந்தும் இன்றும் ஆரோக்யமாக செயல்படுவதை பார்க்கிறோம். ஆனால் 20 வயதுகளில் சர்க்கரை நோயாலும், புற்று நோயாலும் பாதிக்கப்படுவதற்கு நாம் சாப்பிடும் உணவே ஒரு காரணமாக இருக்கிறது. துரித உணவுகளை நாம் நாடிச் சென்றதே நோய்களுக்கு பிரதான காரணம் என்கிறார் மருத்துவர் சிவராமன்.

கெட்டுப்போன இறைச்சிகளையும், காலாவதியான உணவுப் பொருட்களையும் விற்பனை செய்வதை நாம் கண்கூடாகவே பார்க்கும் நிலையும் உள்ளது. பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பது, காய்கறிகள் எப்போதும் ப்ரெஷ் ஆக இருக்க கெமிக்கல் மருந்துகள் கலப்பது, கோழிகளுக்கு எடையை அதிகரிக்க ஊசி என நம்மை சுற்றியிருக்கும் எல்லாமே வணிக மயமானதே நாம் சந்திக்கும் பிரச்சினைக்கெல்லாம் பிரதான காரணங்கள்.

கடைகளில் விற்கப்படும் துரித உணவுகளை சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அந்த உணவு பாதுகாப்பானது தானா..? என்ற கேள்விக்கு விடை கண்டுவிடுவது நல்லது. 

நம் நடவடிக்கையே எதிர்காலம். 2030-ல் ஒருவரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதை கருப்பொருளாக கொண்டு இந்த ஆண்டு உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே உணவை வீணடிப்பதை தவிர்ப்பதும் இங்கே நம் முன் வைக்கப்படும் சவால். நமக்கு தெரியாத உணவுகளை சாப்பிட்டு பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்குவதை தவிர்த்துவிட்டு நமக்கு தெரிந்த ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுப்பதும் அவசியம். 

சிறுதானியங்கள், பருப்பு வகைகள், இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்களை அன்றாட உணவில் எடுத்துக் கொள்வது நம் ஆரோக்யத்திற்கு பேருதவியாக இருக்கும். கடை உணவுகள் தவறில்லை. ஆனால் நம் ஆரோக்கியத்திற்கு உகந்தது எப்போதும் வீட்டில் சமைக்கப்படும் உணவுகள் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்