விநாயகருக்கு கண்... மனிதர்களுக்கு விஷம்...

விநாயகர் பொம்மையை வாங்கி அதுக்கு கண்ணு வைக்கிறோம்னு ஒரு அழகான மணியையும் வாங்குவோம், அந்த அழகுக்குப் பின்னாடி இருக்குற ஆபத்தை இப்ப தெரிஞ்சிக்கலாம் வாங்க...

Update: 2018-09-09 10:14 GMT
* பொதுவாக நம் ஊரில் பிள்ளையார் கண் என அழைக்கப்படும் ஒரு வகை விதைதான் குன்றி மணி. பளிச்சென்ற சிவப்பு நிறமும் அதற்குள் இருக்கும் கருப்பு புள்ளியும் இந்த மணியின் ஸ்பெஷல். பார்த்த மாத்திரத்தில் கண் போன்ற தோற்றத்தை இது தருகிறது. அதனால்தான் நம் ஊரில் பிள்ளையார் கண் என அழைக்கப்படும் இது, மேலை நாடுகளில் நண்டின் கண் எனவும் சேவலின் கண் எனவும் செல்லமாக அழைக்கப்படுகிறது.

* இந்தத் தாவரத்தில் அறிவியல் பெயர் Abrus precatorius. உலகெங்கும் உள்ள வெப்ப மண்டல காடுகளில் இது காட்டுச் செடியாக வளர்ந்து நிற்கிறது. 10 அடி உயரம் வரை வளரும் இந்தச் சிரிய செடியில் அவரை போல காய் காய்க்கும். அதற்குள் இருந்து வெளிவரும் விதைதான் குன்றி மணி.

* நம் ஊரில் காலம் காலமாக குன்றி மணியை எடைக்கல்லாக பயன் படுத்தப்பட்டது உண்டு. குறிப்பாக தங்கத்தை அளக்க குன்றி மணிதான் எடைக்கல். ஒரு குன்றி மணிக்கு இணையான அளவு கொண்ட தங்கமே குண்டுமணி தங்கம் என பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டது.

* உலகம் முழுவதும் இந்த குன்றி மணியின் அழகில் மயங்காதவர்கள் கிடையாது. முத்து பவளம் போல இந்த மணியை ஆபரணங்களில் பயன்படுத்தியவர்களும் உண்டு. ஐரோப்பாவில் இப்போது இந்த மணி rosary pea... அதாவது ஆபரண பட்டாணி என்றுதான் அழைக்கப்படுகிரது.

* என்னதான் பட்டாணியோடு இதனை இணைத்துப் பேசினாலும் இதை சுண்டல் போல வேக வைத்து தின்ன முடியாது. காரணம் மிக மிக கொடிய விஷத்தன்மை கொண்ட தாவரம் இது. ஒரு மனிதனைக் கொல்ல ஒரே ஒரு குன்றி மணி போதுமானது என்கிறார்கள். உலகம் முழுவதும் தாவரத்தில் இருந்து பெறப்படும் விஷத்தில் மூன்றாவது இடம் இந்த குன்றி மணிக்குத்தான்.

* ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் இந்த குன்றி மணியை கடிக்காமல் அப்படியே விழுங்கினால் ஜீரணமாகாமல் மலத்தில் வெளியேறிவிடும். விஷமும் நம்மைத் தாக்காது. கடித்து விழுங்கினால் அவ்வளவுதான். 
குன்றி மணியில் இவ்வளவு கொடிய விஷம் இருந்தாலும் இந்தத் தாவரம் முழுவதும் விஷம் கிடையாது. 

* குன்றிமணியின் வேர் நமது சித்த மருத்துவத்திலும் கூட மருந்தாகப் பயன்படுகிறது. இதன் இலைகளில் டீ போட்டுக் குடிக்கும் பழக்கமும் உலகம் முழுவதும் இருந்திருக்கிறது.
 
* மருந்தோ விஷமோ... ரூபாய்க்கு நாலு தருகிறார்கள்.இது என்ன செய்துவிடப் போகிறது என சாதாரணமாக நினைக்கக் கூடாத தாவரம்தான் குன்றி மணி. குழந்தைகளிடம் இருந்து இதைக் கொஞ்சம் தள்ளியேதான் வைக்க வேண்டும்.
Tags:    

மேலும் செய்திகள்