விநாயகர் சிலைகளை வைப்பதற்கு விதிமுறைகள் என்ன ?

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பது மற்றும் ஊர்வலம் நடத்துவது தொடர்பான விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2018-08-10 12:37 GMT
விநாயகர் சிலைகளை வைப்பதற்கு காவல்துறை, தீயணைப்பு துறை, உள்ளாட்சி துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் முறையான தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் கலந்த சிலையையோ, வண்ணங்கள் பூசப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலையையோ பயன்படுத்தக் கூடாது. களி மண்ணால் மட்டுமே சிலையை செய்திருக்க வேண்டும். சிலை அமைக்கப்படும் பந்தல் தென்னை மர ஓலை உள்ளிட்ட எரியும் தன்மை உடையதாக இருக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக இரும்பு தகடுகள் கொண்டு அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெடிக்கும் தன்மை உள்ள பொருட்களை சிலைகளின் அருகே வைக்கக் கூடாது எனவும், தேவையான முதலுதவி வசதிகளை செய்து வைத்திருக்க வேண்டும் வேறு வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளின் அருகே சிலைகள் வைக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது. காலை இரண்டு மணிநேரம் மாலை இரண்டு மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கி வாயிலாக பாடல்களை ஒலிக்க விட வேண்டும் எனவும்குறிப்பிட்ட மதம், சமயம், அரசியல் சார்ந்த விளம்பர பேனர்களையோ, சிலைகளையோ வைக்கக்கூடாது என்றும், சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் குறிப்பிட்ட மதங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பக்கூடாது.

விநாயகர் சிலை வைக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் கரைக்க வேண்டும் எனவும், விநாயகர் சிலைகள் அமைக்கப்படும் இடங்களிலோ அதை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போதோ பட்டாசுகள் வெடிக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலைகளை கரைப்பதற்கு முன்பாக சுற்றுப்புற சூழலுக்கு கேடு தரும் பிளாஸ்டிக் பொருட்களை சிலையில் இருந்து எடுத்துவிட வேண்டும் என்றும், அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்ட 48 மணி நேரத்தில் கடல், ஏரி, குளங்களில் கரை ஒதுங்கிய கழிவுகளை உள்ளாட்சி துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்