தந்தை கடனை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி மகளுக்கு கல்விக்கடன் மறுப்பு - ஸ்டேட் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தந்தை பெற்ற வங்கிக்கடனை அவர் திருப்பி செலுத்தாததால் அவரது மகளுக்கு கல்விக்கடன் மறுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-07-11 11:45 GMT
தனக்கு கல்விக் கடன் வழங்க ஸ்டேட் வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது, தீபிகாவின் தந்தை ஸ்டேட் வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தவில்லை என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவி தீபிகாவிற்கு கடன் வழங்க மறுக்கும் வங்கியின் முடிவு சரியானது தான் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தீபிகா தாக்கல் செய்த   மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், தண்டபாணி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது தந்தைக்கு எந்த வங்கியிலும் கடன் நிலுவையில் இல்லை எனவும், அவரின் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக வங்கி நிர்வாகம், 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் மாணவி தரப்பில் வாதிடப்பட்டது. தீபிகாவின் தந்தை வங்கி கடன் பெற்றதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவற்றை 16-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்