வாஜ்பாய் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு, வளர்ப்பு மகள் நமீதா எரியூட்ட, 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Update: 2018-08-17 12:14 GMT


முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று  காலமானார்.இதனையடுத்து, அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த  வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள்,காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,  பா.ஜ.க. எம்.பிக்கள் மரியாதை செலுத்தினர். தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், திமுக செயல்தலைவர் ஸ்டாலின், உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் வீட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட வாஜ்பாய் உடல், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கனக்கானோர்  அஞ்சலி செலுத்தினர்.  பின்னர், அங்கிருந்து, சுமார் 2 மணி அளவில் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.  அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில், வாஜ்பாயின் உடல் கொண்டு செல்லப்பட்ட போது, வழி நெடுகிலும், பொதுமக்கள் மலர் தூவி தங்களது அஞ்சலியை செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.

கண்ணீர் விட்டு அழுத பிரதமர் மோடி



ஸ்மிரிதி ஸ்தல் வந்த வாஜ்பாயின் உடல், ராணுவ வாகனத்திலிருந்து இறக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி கண்ணீர் விட்டு அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. 

முப்படை வீரர்கள் இறுதி மரியாதை



வாஜ்பாய் உடலுக்கு, முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். வேத மந்திரங்கள், ராணுவ இசை முழங்க, வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யநாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்,  ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். 

அத்வானி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி இறுதி அஞ்சலி



முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி சடங்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆப்கான் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய், பூடான் மன்னர் ஜிக்மே வாங்கக், பாகிஸ்தான் சட்ட அமைச்சர் அலி ஜாஃபர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மண் கிரியேல்லா, உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். தலைவர்களின் அஞ்சலிக்கு பிறகு, வாஜ்பாய் உடல் மீது போர்த்தப்பட்ட தேசிய கொடி, அவரது பேத்தியான நிகாரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது.

வாஜ்பாய் உடலுக்கு மகள் நமீதா எரியூட்டினார்



பின்னர், வேதமந்திரங்கள் முழங்க குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்க,வாஜ்பாயின் இறுதி சடங்கு நடைபெற்றது. தகன மேடையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, வளர்ப்பு மகள் நமீதா எரியூட்டினார். 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல், தகனம் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்