பாஜக என கூறி மோசடி செய்த நபர்..! ரூ.1.5 கோடி வங்கிக் கணக்கில் வந்தது எப்படி?

பெங்களூருவில் பாஜக என கூறி மோசடி செய்த நபரின் கணக்கில் இருந்து முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி குட்டி ராதிகாவின் வங்கி கணக்கில் ஒன்றரை கோடி ரூபாய் பணம் செலுத்தப்பட்ட விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2021-01-09 04:27 GMT
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் 2வது மனைவியான இவர் இப்போது போலீசாரின் விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கிறார்.... 

பெங்களூருவில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி யுவராஜ் என்பவர் பலரிடமும் பண மோசடி செய்துள்ளார். ஜோதிடராக உள்ள இவர், தன்னை ஆர்எஸ்எஸ் என்றும் பாஜக நிர்வாகி என்றும் கூறி பலரிடமும் பண வசூல் செய்துள்ளதாக தெரியவந்தது. 

இவரை மத்திய குற்றப்பிரிவு  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவரின் வங்கிக் கணக்கை அவர்கள் சோதனை செய்த போது குட்டி ராதிகாவின் வங்கிக் கணக்கிற்கு ஆன்லைன் பரிமாற்றம் மூலம் ஒன்றரை கோடி ரூபாய் பணம் செலுத்தப்பட்டது தெரியவந்தது. 

மேலும் குட்டி ராதிகாவின் சகோதரர் ரவிராஜின் வங்கிக் கணக்கிற்கும் பணம் சென்றது உறுதியான நிலையில் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஏற்கனவே ரவிராஜ் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் குட்டி ராதிகாவும் சாம்ராஜ்பேட்டையில் உள்ள  மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார். 

அப்போது அவரிடம் ஒன்றரை கோடி ரூபாய் பண பரிவர்த்தனை குறித்து சரமாரியான கேள்விகள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குட்டி ராதிகா, தன்னை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த யுவராஜ், அதற்காக 15 லட்ச ரூபாய் பணம் அனுப்பியதாகவும், பின்னர் உறவினர் ஒருவர் மூலம் 60 லட்ச ரூபாய் பணம் அனுப்பியதாகவும் கூறியுள்ளார். 

அதை தாண்டி வேறு எந்தவித தொடர்பும் யுவராஜூடன் இல்லை என்றும், தங்கள் குடும்ப ஜோதிடர் என்ற முறையில் மட்டுமே அவருடன் பழக்கம் இருந்தது எனவும் குட்டி ராதிகா தெரிவித்துள்ளார். 

இதனிடையே குட்டி ராதிகாவை இந்த வழக்கில் இருந்து தப்ப வைக்க பல்வேறு முயற்சிகள் நடப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையில் அதையும் அவர் மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் முக்கிய புள்ளியான யுவராஜின் வீட்டில் இருந்து 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்