நித்யானந்தா... அடுத்த பரபரப்பு...

நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள தன் 2 மகள்களை பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும் என ஜனார்த்தனன் ஷர்மா என்பவர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் கனடா நாட்டை சேர்ந்த பெண் ஒருவரும் ஆசிரம நிர்வாகம் மீது அதிர வைக்கும் புகார்களை முன்வைத்துள்ளார்.

Update: 2019-11-25 20:52 GMT
ஜனார்த்தன் என்பவர் தன் 3 மகள்கள் மற்றும் ஒரு மகனை பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் குருகுல கல்வி முறையில் தங்கி படிப்பதற்காக சேர்த்துள்ளார். 

பின்னர் நித்யானந்தாவின் மீதான ஈடுபாடு காரணமாக தன் மனைவியுடன் தானும் ஆசிரம சேவைகளில் இணைந்து கொண்டார். ஆசிரமத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஜனார்தன் ஷர்மா பிஆர்ஓ போல செயல்பட்டு வந்துள்ளார். ஆசிரமத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆன்மீக பிரசாரத்திற்காக இளம் பெண்களை அனுப்புவது வழக்கம்.. இதற்காக ஜனார்தன் ஷர்மாவின் மகள்களை அனுப்பியுள்ளார் நித்யானந்தா. 

வெளிநாட்டுக்கு சென்ற மகள்கள் திரும்பி வராதது குறித்து கேள்வி எழுப்பிய ஜனார்தனனுக்கும் ஆசிரம நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்களுக்கு அதிகம் பிரச்சினை உள்ளதாக மகள்கள் தெரிவித்ததாகவும் கூறுகிறார் ஜனார்தன்.

இதனிடையே மகள்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என கோரி ஜனார்தனனின் மனைவி சென்ற போது ஆசிரம நிர்வாகம் அவர்களை மிரட்டியதாகவும், அநாகரீகமான முறையில் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கிறார் அவர். அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் உள்ள தங்கள் மகள்களை மீட்க வேண்டும் என்பதற்காக பல பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆசிரமத்தில் இருந்த தன்னுடைய ஒரு மகளும், ஒரு மகனும் மீட்கப்பட்ட நிலையில் மற்ற 2 மகள்களின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனிடையே ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இந்த நிலையில் கனடா நாட்டை சேர்ந்த சாரா லாண்ட்ரி என்ற பெண்ணும் தற்போது நித்யானந்தா மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். நித்யானந்தா ஆசிரமத்தின் சமூக வலைத்தள பிரிவு அதிகாரியாக இருந்த தனக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டதாகவும், ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கும் அதே நிலை தொடர்வதாகவும் அவர் பரபரப்பை கிளப்பியிருக்கிறார். 

ஆசிரமத்தில் உள்ள தன் பிள்ளைகளை மீட்க வேண்டும் என ஒரு பக்கம் பெற்றோர் கதறிக் கொண்டிருக்கும் நிலையில் ஆசிரமத்தில் நிர்வாகியாக இருந்த ஒரு பெண்ணே அங்கு நடக்கும் சம்பவங்களை பகிரங்கப்படுத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 
Tags:    

மேலும் செய்திகள்