அண்ணன், தங்கை பிணைப்புக்கென அசத்தல் திருவிழா : 'பாய் தூஜ்'

வட மாநிலங்களில் இன்று கொண்டாடப்பட்டு வரும் 'பாய் தூஜ்' திருவிழாவின் பின்னணி

Update: 2018-11-09 05:22 GMT
அன்பைப் பொழிந்து வாழும் சகோதர - சகோதரிகளின் பாசமெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான். திருமணமாகி அவரவருக்கு ஒரு குடும்பம் வந்து விட்டால் அதன் பின்பு பாசம் பாராட்ட நேரம் ஏது? இந்த சோகக் காட்சிகளுக்கு தீர்வாகத்தான், இந்தியாவின் வட மாநிலங்கள் எங்கும் கொண்டாடப்படுகிறது 'பாய் தூஜ்.' 

பாய் என்றால், சகோதரன். தூஜ் என்றால் பூஜை. அதாவது, இது சகோதரனுக்காக சகோதரி செய்யும் பூஜை. இந்தப் பண்டிகையில், சகோதரி தமது, சகோதரனை சந்தித்தே ஆக வேண்டும் என்பது ஐதீகம்.

டெல்லி மற்றும் யமுனை நதிக்கரையை ஒட்டி வாழ்பவர்கள் இந்த நாளில் சகோதர - சகோதரிகளாக இணைந்து மதுராவின் யமுனை நதிக்கரையில் திரள்கின்றனர். சகோதரன் நீடூழி வாழ சகோதரிகள் பூஜை செய்கின்றனர். பதிலுக்கு சகோதரன், 'உன்னை எப்போதும் காப்பேன்' என உறுதி அளிக்கிறான். கூடவே பரிசும் அளிக்கிறான். 

யமுனை அருகே இல்லாதவர்கள் சகோதரனின் வீட்டுக்கே போய், அவர்கள் நலனுக்காக பூஜை செய்கின்றனர். ஆரத்தி எடுத்து, திலகமிட்டு விழுந்து வணங்குகின்றனர். 
பௌ-பீஜ் (Bhau-beej), பாய் தூஜ் (Bhai Dooj), பாய் போட்டா (Bhai Phota) என்றெல்லாம் குறிப்பிடப்படும், இந்த இந்துக்களின் விழா வட மாநிலங்களில், தீபாவளித் திருநாளை அடுத்த வளர்பிறை இரண்டாம் நாளன்று கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில், நாடே சகோதரப் பாசத்தால் திணறிப் போகிறது. சகோதரன் எந்தச் சீமையில் இருந்தாலும், அவர்களை சந்திக்க தனி ஆளாகக் கிளம்பிவிடுகிறார்கள் பெண்கள். இன்றைய நாளில் மட்டும் பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணங்கள் அறிவிக்கப்படுகின்றன. பக்தி சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இப்படிக் கிளம்பும் பெண்களை புகுந்த வீட்டினர் தடுப்பதில்லை. கணவன்மார்களே, மனைவிகளை, அனுப்பி வைக்கின்றனர். காரணம், அன்று அந்தக் கணவர்களைத் தேடி அவர்களின் சகோதரிகள் கட்டாயம் வருவார்கள். 

இப்படி ஒரு பண்டிகை எதனால் தோன்றியது? 

சூரிய தேவனை, சாங்கியா என்ற பெண் மணந்துகொண்டாள். அவர்களுக்கு எமன், யமுனா என, ஒரு மகனும் மகளும் இரட்டையர்களாகப் பிறந்தனர். காலப் போக்கில் சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியாத சாங்கியா, தம்மைப் போல் ஒரு பிரதி பிம்பத்தைப் பெண்ணாகப் படைத்து, அங்கு விட்டுவிட்டு பூமிக்கே சென்றுவிட்டாள். 

சாங்கியாவின் பிரதிபிம்பமாக வந்தவள் யமனையும் யமுனாவையும் மாற்றாந்தாப் பிள்ளைகளாகப் பார்த்தாள். சூரியனின் மனதைக் கலைத்து அண்ணன் - தங்கையை சொர்க்கத்தை விட்டு விரட்டினாள். இதனால் பூமிக்கு வந்த யமுனா, நதியாக மாறினாள். எமனோ, பாவம் செய்பவர்களை தண்டிக்கத் தொடங்கினான். பல யுகங்களாகப் சந்தித்துக் கொள்ளாத இவர்கள், ஒரு நாள் சந்தித்தனர். அன்று தமது அண்ணனை சிறப்பாக உபசரித்தாள் யமுனா. 

'நீ வேண்டிய வரத்தைக் கேள்' என சகோதரியிடம் கேட்டார் எமதர்மன். 'பாவம் செய்பவர்களை தண்டிக்கும் நீங்கள், இந்த 'பாய் தூஜ்' நாளில் யமுனாவில் நீராடி சந்தித்துக்கொள்ளும் உடன்பிறப்புகளை மட்டும் தண்டிக்கக் கூடாது' என்று யமுனா கேட்க, 'அப்படியே ஆகட்டும்' என்றாராம் எமதர்மன். 

இந்த நாளில், சகோதரர் எங்கே இருந்தாலும் அங்கே போய் பார்த்தே ஆகவேண்டும் என்பதால், சிறையில் கூட பெண்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சிறை தண்டனை அனுபவிக்கும் தங்கள் சகோதரர்களுக்கு, கம்பிகளுக்கு வெளியே இருந்து ஆரத்தி எடுத்து மகிழ்கின்றனர் சகோதரிகள். உறவுகளின் பிணைப்புகள் தளர்ந்து வரும் இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட விழாக்கள் இந்தியாவில் மட்டுமல்ல... உலகம் முழுமைக்கும் தேவையானது தான்.
Tags:    

மேலும் செய்திகள்