காட்சிப் பொருட்களாக உள்ள தமிழக சிலைகளை திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலியா சம்மதம் என தகவல்

திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட தமிழக கோயில் சிலைகளை மீட்கும் முயற்சியில் வரலாற்று சிறப்பு மிக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.கோட்டையில் நடந்த கூட்டமும், ஆச்சர்ய தகவல்களும் ஒரு பிரத்யேக தொகுப்பு

Update: 2018-06-13 08:31 GMT
தமிழகக் கோயில்களில் இருந்து காணாமல் போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் வெளிநாட்டு கலைக்கூடங்களில் காட்சிப் பொருட்களாக இருக்கின்றன. அந்த தெய்வங்கள் எப்போது கோயில்களுக்குத் திரும்பும் என்பதுதான் ஆன்மீகவாதிகளின் கேள்வியாக உள்ளது. 

இந்த கேள்விகளுக்கு விடை காணும் விதமாக நேற்று தமிழக தலைமைச் செயலகத்தில் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய கலைக்கூடத்தில் உள்ள எட்டு சிலைகளை தமிழகத்துக்கு கொண்டு வரும் முயற்சிகள் இந்த கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல், தொல்பொருள் துறையின் ஆணையர், ஆஸ்திரேலிய தேசிய கலைக்கூட்டத்தின் துணை இயக்குநர் கிருஸ்டன் பைஸ்லி, ஆஸ்திரேலிய துணை தூதர் சூசன் கிரேஸ் என மிக முக்கியமானவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் சிலைகளை பறிகொடுத்த  அறநிலையத்துறையின் ஆணையர் கலந்து கொள்ளவில்லை. 

சிலைகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் தமிழக அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் பாண்டியராஜன் சொல்ல, திருடப்பட்ட சிலைகள் காட்சிப் பொருட்கள் அல்ல, அவை மக்களின் மத உணர்வுகள் என பொன்.மாணிக்கவேல் கருத்துக்களை முன் வைக்க, ஆஸ்திரேலியாவில் உள்ள 8 சிலைகளையும் திரும்பத் தருவதாக ஒப்புக் கொண்டது ஆஸ்திரேலியா.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய பிரதமர் அபோட் இந்திய பிரதமர் மோடியிடம் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மூன்று சிலைகளை ஒப்படைத்தார். இதுவும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் எடுத்த நடவடிக்கையில் நடந்து முடிந்தது. இந்நிலையில் மீதமுள்ள 8 சிலைகள் விரைவில் தமிழகம் வரப்போகிறது. 

ஏற்கனவே நமது பிரதமர் மோடியிடம் ஆஸ்திரேலியா பிரதமர் சில சிலைகளை ஒப்படைத்தார்... 

விக்ரமங்களம் கோயிலுக்குச் சொந்தமான நடராஜர் சிலை, இதன் மதிப்பு 31.8 கோடி. அடுத்து, கை உடைந்த அர்த்தநாதீஸ்வரர் சிலை, இதன் மதிப்பு 36 கோடி. விருத்தாச்சலத்தில் உள்ள விருதகிரீஸ்வரர் ஆலயத்தின் நரசிம்மியின் கற்சிலை. இதன் மதிப்பு சுமார் 1.5 கோடி.  

இனி தமிழகம் வரப்போகும் சிலைகளைப் பற்றிப் பார்ப்போம். 

கொல்லுமாங்குடி கோயிலின் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நந்தி சிலை, மானம்பாடி கோயிலின் 1.72 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறுமுகம் சிலை.  ஆத்தாளநல்லூர் கோயிலின் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள துவாரபாலர் சிலை. 

சீர்காழி சாயவனேஸ்வரம் கோயிலின் குழந்தைபாலகர், மற்றும், தெய்வானை சிலைகள். மானம்பாடி கோயிலின் நடன சம்பந்தர், மற்றும் காளி சிலை ஆகியவைதான் ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழகம் வரவுள்ள சிலைகள். 

காணாமல் போன சிலைகள் ஒவ்வொன்றாக தமிழகம் திரும்புவதற்க்கான சிறப்புக் காரணம் ஒன்று உள்ளது. முக்கியமான சிலை கடத்தல் வழக்குகளில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தன்னை புலன் விசாரணை அதிகாரியாக அறிவித்துக் கொண்டதுதான். காவல்துறை வரலாற்றில் உயர் பதவியில் இருக்கும் ஒரு அதிகாரி தானே புலன் விசாரணை அதிகாரியாக களம் இறங்குவது அபூர்வம் என்கிறார்கள். 

இத்தனை சிலைகளையும் திருடியவர் எங்கே? அவர் பெயர் என்ன? ஆஸ்திரேலியாவுக்கு சிலைகளைக் கடத்தியவர் சுபாஷ் சந்திர கபூர் என்ற சிலை கடத்தல் மன்னன். ஐந்து வருடங்களுக்கு முன்பு பொன்.மாணிக்கவேல் சினிமா பாணியில் ஜெர்மனியில் மறைந்திருந்த சுபாஷ் கபூரை கைது செய்து தமிழகம் கொண்டு வந்தார். தற்போது சுபாஷ் கபூர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியா நாட்டில் மட்டுமின்றி, சிங்கப்பூரில் 16 சிலைகள், அமெரிக்காவில் 31 சிலைகள் என இன்னும் தமிழக தெய்வங்கள் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளன. இவை தமிழ கோயில்களில் அருள் புரிவது எப்போது என்பதுதான் ஆன்மீகவாதிகளின் கேள்வியாக உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்