ரஜினியுடன் முதல் முறையாக ஜோடி சேரும் த்ரிஷா
பதிவு: ஆகஸ்ட் 20, 2018, 05:40 PM
சூப்பர்ஸ்டார் ரஜின்காந்தின் அடுத்த திரைப்படத்தில் அவருடன் நடிகை த்ரிஷா நடிப்பார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 


ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ், அனிருத் இருவருமே ரஜினியின் தீவிர ரசிகர்கள் என்பதால், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.பல நாட்களாக நல்ல வில்லனை எதிர்பார்த்து காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு, விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடிப்பதாக வந்த செய்தி, இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. ஜூலை மாதம், சிம்ரன் ரஜினியுடன் ஜோடி சேருகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. சிம்ரன் இதுவரை ஜோடி சேராமல் இருந்த ஒரே உச்ச நட்சத்திரம் ரஜினி தான். அந்த குறையும் தீர்ந்ததால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தி நடிகர் நவாசுதின் சித்திக்கும்  இந்த படத்தில் இணைந்துள்ளார்.

தற்போது நடிகை த்ரிஷா முதன்முறையாக ரஜினியுடன் இந்த படத்தில் ஜோடி சேருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை தன்னால் நம்பமுடியவில்லை என்றும்  கனவில் மிதப்பது போல உள்ளது என்றும் த்ரிஷா  தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் 


இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் ஜூன் மாதம் தொடங்கி, இதுவரை 2 கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ளன. இன்னும் 50 சதவீதம் படப்பிடிப்புகள் மட்டுமே உள்ளன. இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.