டி.என்.பி.எஸ்.சி முறைகேடு : கணினி மையம் வைத்திருந்த ஜெயக்குமார் கோடீஸ்வரன் ஆனது எப்படி?

டிஎன்பிஎஸ்சியுடன் எந்த தொடர்பும் இல்லாத, சென்னை இடைத்தரகர் ஜெயக்குமாரின், முக்கிய தொழிலான போட்டிதேர்வு முறைகேடு மூலம் கோடி கோடியாய் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
x
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4, குரூப்2ஏ முறைகேடுகள் பூதாகரமாகி 47 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள் 30க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், சென்னை இடைத்தரகர் ஜெயக்குமார், சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை ஆவடியில் கணினி மையம் வைத்து நடத்தி வந்துள்ளார் ஜெயக்குமார். அப்போது, பள்ளிக் கல்வித்துறைக்காக ஆவணங்கள் நகல் எடுக்க வந்த டிஎன்பிஎஸ்சி ஊழியரான ஓம்காந்தனுடன் பழக்கம் ஏற்பட்டது.

தான் நடத்தி வந்த கணினி மையம் லாபத்தைக் கொடுக்காததால், டிஎன்பிஎஸ்சி ஊழியர்களுடன் ஏற்பட்ட நட்பை பயன்படுத்தி போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்வதில் கற்றுத்தேர்ந்துள்ளார் ஜெயக்குமார். 

அதன் மூலம் 2016 ஆம் ஆண்டு முதல் ஓம்காந்தனுடன் இணைந்து டிஎன்பிஎஸ்சி அலுவலக கோப்புகளை கையாளும் அறையின் சாவி முதல், அதன் ரகசியங்களை கற்றுக் கொண்ட ஜெயக்குமார், நண்பரின் உதவியுடன் முறைகேடு செய்வதை ஆரம்பித்துள்ளார். 

முறைகேடு செய்வதை முழுநேர தொழிலாக மாற்றிய ஜெயக்குமார், முகவர்கள் அமைத்து, ஆட்களை பிடித்து, கத்தை கத்தையாக பணத்தை பெற்றுக் கொண்டு அரசு பணிகள் வாங்கி தந்துள்ளார் என தெரிகிறது. இதன் வருவாய் அதிகரித்து, கார், பணம், வீடு மற்றும் நிலம் என தனது அந்தஸ்தை ஜெயக்குமார் உயர்த்திக்கொண்டுள்ளார். 

இதுவரை சுமார் ரூ.6 கோடி வரை, தேர்வர்களிடம் இருந்து, நேரிடையாக பணம் கையாளப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இடைத்தரகர் ஜெயக்குமார், அவரது நண்பர்களிடம் இருந்து 4 சொகுசு கார்கள், 12 லட்சம் ரூபாய் பணத்தை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர். 

இது தவிர மேல்மருவத்தூர் அருகே ஜெயக்குமார் வாங்கிய மூன்று ஏக்கர் நிலத்தையும் முடக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கூடா நட்பு கேடாய் முடியும் என்ற பழமொழிக்கு இடைத்தரகர் ஜெயக்குமாரும், ஓம்காந்தனும் மிகச் சிறிய உதாரணமே..


Next Story

மேலும் செய்திகள்