நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள தமிழகம்

உலக அரங்கில், வரலாற்று முக்கியத்துவம் நிறைந்து கிடக்கும் தமிழகம், நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.
x
ஆயிரம் ஆண்டுகளை கடந்து, கம்பீரம் காட்டும் தஞ்சை பெரியகோயில் முதல் முக்கடல் சங்கமமான குமரி வரை, உலக சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் ஏராளமானவை தமிழகத்தின் பெருமை. கங்கைகொண்ட சோழபுரம், மதுரை மீனாட்சி  அம்மன் கோயில், ஸ்ரீரங்கத்தின் ஆயிரங்கால் மண்டபம், நெல்லை காசி விஸ்வநாதர் கோயில் என நூற்றாண்டுகள் பல கடந்து, தமிழர்களின் கட்டட கலை, நாடு கடந்தும் ஈர்க்கிறது. பசுமை கம்பளமாய் நீண்டு நெளிந்து உயர்ந்து நிற்கும் மலை தொடர், அதில் தவழ்ந்து குதிக்கும் நீர் வீழ்ச்சிகள், விரிந்து பரந்த வனம், அதில், வாழும் புலி உள்ளிட்டவை, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இயற்கை ரகசியங்கள்.

கால படிமங்களாய் மன்னர்களின் வாழ்வியல், கோட்டை, கொடை, போர் மரபு, நினைவுச் சின்னங்கள் உள்ளிட்டவை பயணிகளை ஈர்க்கும் ராஜ தந்திரம். நாகூர் தர்ஹா, சாந்தோம் தேவாலயம், குமரிக்கண்ட மிச்சமாய் நிற்கும் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் தீவு, அதை இணைக்கும் பாம்பன் பாலம் என எத்தனை எத்தனை நம்மிடம். இவைகளை காண, தெற்காசிய உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தமிழகம் வருகின்றனர். வெளிமாநில பயணிகளையும் சேர்த்து கோடிகளை நெருங்கும் தரவுகள், துல்லியமானது இல்லை என்கிறது ஆய்வு. 
 
சாலை, தங்குமிடம், உள்கட்டமைப்பு வசதி, வழிகாட்டல், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு உறுதி இவைகளை மேம்படுத்தினால், பல்லாயிரம் கோடிகளில் சுற்றுலாத் துறை, வருவாய் ஈட்டும் என்கிறது அத்துறை சார்ந்தோரின் ஏக்கக் குரல். காலம் கொடுத்த கொடைகளை, இயற்கையின் பிரமாண்டத்தை பாதுகாத்து, கலை, கலாச்சாரம், கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற தொன்மை நாகரீகம் போன்ற வரலாறுகளை பாதுகாத்து எடுத்துரைத்தால், சுற்றுலாவில், தமிழகம் எப்போதும் முதலிடம்தான்.

Next Story

மேலும் செய்திகள்