எந்த உண்மையும் வெளிவரக்கூடாது என நினைக்கின்றனர் - முகிலன்

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன், கரூர் நீதிபதி வீட்டில் நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
x
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த முகிலன் பிப்ரவரி 15-ல் சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் மாயமானார். இந்நிலையில் 6-ம் தேதி திருப்பதியில் அவரை ஆந்திர போலீசார் மீட்டனர். இதனிடையே பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் முகிலனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பபட்ட அவர்,  மருத்துவ பரிசோதனை நிறைவு பெற்றதை தொடர்ந்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து முகிலனை  கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட முகிலன் நள்ளிரவில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயகார்த்திக்  வீடடில் ​ ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீசார் தன்னை தூங்கவிடாமல் சித்ரவதை செய்வதாகவும், 4 நாட்களாக தூங்கவில்லை என்றும், எனவே சிகிச்சை அளிக்க உத்தரவிடவேண்டும் என்றும் நீதிபதியிடம் முகிலன் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவரை வரும் 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சென்னை நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக நள்ளிரவில் தன்னை கரூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தியுள்ளதாக முகிலன் முழக்கமிட்டார். எந்த உண்மையும் வெளிவரக்கூடாது என காவல்துறை நினைப்பதகாவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்