ரவுடி ஆசைதம்பி முதல் வல்லரசு வரை போலீசாரின் பரபரப்பான என்கவுன்ட்டர்கள்...

ரவுடி ஆசைதம்பி முதல் வல்லரசு வரை போலீசாரின் பரபரப்பான என்கவுன்ட்டர்கள் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு
x
* தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை காப்பாற்றுவதற்கு போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவ்வப்போது என்கவுன்ட்டர்களும் நடத்தப்பட்டு வருகின்றன. 1980ல் நக்சலைட்கள் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட என்கவுன்ட்டர், படிப்படியாக ரவுடிகள் பக்கம் திரும்பியது. 1998ஆம் ஆண்டு ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்குவதற்காக சென்னை  போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையில், நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே நடுரோட்டில் பிரபல ரவுடி ஆசைத்தம்பி துப்பாக்கி குண்டுக்கு பலியானார். 2002ஆம் ஆண்டு தமிழக காவல்துறையினர் பெங்களூரு சென்று அங்கு பதுங்கியிருந்த இமாம் அலி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

* 2003 ஆம் ஆண்டு ரவுடி வீரமணியை சென்னை போலீசார் சுட்டு கொன்றனர். 2004ஆம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, சேதுமணி ஆகியோர் சத்தியமங்கலத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். 2007ஆம் ஆண்டு போதை மருந்து கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வெள்ளை ரவி மற்றும் பிரபல ரவுடி மணல்மேடு சங்கர் ஆகியோர் என்கவுன்ட்டரில்  கொல்லப்பட்டனர். 

 * 2008ஆம் ஆண்டு சென்னை காசிமேட்டில் பிரபல ரவுடி பாபா சுரேஷை போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர். 2010 திண்டுக்கல் பாண்டி மற்றும் கூடுவாஞ்சேரி வேலு ஆகிய இரண்டு பிரபல ரவுடி களையும் சென்னை போலீசார் நீலாங்கரையில் வைத்து என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். அதேஆண்டு, கோவையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாடகை கார் ஓட்டுநர் மோகன் ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். 2012ஆம் ஆண்டு சிவகங்கை, காவலர் ஆல்பின் சுதனைக் கொலை செய்த குற்றவாளிகள் பிரபு, பாரதியை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். மேலும் அதே ஆண்டில் சென்னை வேளச்சேரியில் பதுங்கியிருந்த, பீகாரைச் சேர்ந்த ஐந்து வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகினர். 

* 2015ஆம் ஆண்டு பிரபல ரவுடி கிட்டப்பா நெல்லை மாவட்டம் பத்தமடையில் வைத்து என்கவுண்டர் செய்யப்பட்டார்.  2017ஆம் ஆண்டு சிவகங்கை, ரவுடி கார்த்திகைச்செல்வன்,  ராமநாதபுரம் ரவுடி கோவிந்தனை போலீசார் சுட்டுக்கொன்றனர். 2018ஆம் ஆண்டு ரவுடிகள் முத்து இளாண்டி, சகுனி கார்த்திக், மதுரை சிக்கந்தர், சென்னை தரமணியில் ராயப்பேட்டை ரவுடி ஆனந்தன் ஆகியோர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

* 2019ல் சேலம் மாவட்டம் கரியாபட்டியில் ரவுடி கதிர்வேலும், தற்போது, சென்னை மாதவரத்தில் ரவுடி வல்லரசும் போலீஸின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர். தமிழகத்தில் ஆசைதம்பி முதல் வல்லரசு வரை, 80க்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்