கல்குவாரி உரிமையாளர் கொலை...கஞ்சா புகைப்பதை கண்டித்ததால் நடந்த கொடூரம்

அருப்புக்கோட்டை அருகே, கஞ்சா புகைப்பதை கண்டித்ததால் கல்குவாரி உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழியில் காவல்நிலையம் அருகே, கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஒருவரை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல் தப்பியோடிவிட்டது. கொலை செய்யப்பட்டவர் ஆலடிபட்டி கிராமத்தை சேர்ந்த சாமுவேல் மரிய செல்வகுமார் என அடையாளம் தெரிந்தது. இதை தொடர்ந்து போலீசார், வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆலடிபட்டி கிராமத்தில் சொந்தமாக கல்குவாரி நடத்தி வந்த சாமுவேல் மரிய செல்வகுமார், தனது குடும்பத்தினருடன் திருச்சுழியில் வசித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இரவு திருச்சுழி பஜாருக்கு சென்ற சாமுவேல் மரிய செல்வகுமார், வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டி கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருச்சுழி காவல்துறையினர், குற்றவாளிகள் யார் என்ற தேடுதல் பணியை தொடங்கினர். கொலை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள திருச்சுழி சார்பதிவாளர் அலுவலகத்தின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த மூன்று CCTV கேமராக்கள் செயல்படாததால் காவல் துறையினர் திணறி வந்தனர்.
           
இந்நிலையில், சாமுவேல் மரிய செல்வகுமாரை கொலை செய்தவர்கள், திருச்சுழி அருகே உள்ள பாறைக்குளம் மலையடிவாரத்தில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மூன்று தனிப்படை போலிசார் அங்கு சென்று, மூன்று பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் திருச்சுழியை சேர்ந்த அருண்பாண்டி, ஹரிகிருஷ்ணன், பாண்டி என தெரிய வந்தது. அருண்பாண்டி, ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள், சாமுவேல் மரிய செல்வக்குமார் வீட்டுப் பகுதியில் மது மற்றும் கஞ்சா போன்ற பொருட்களை பயன்படுத்துவது வழக்கம். அதற்கு இடைஞ்சலாக இருந்ததுடன், மிரட்டல் விடுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து சாமுவேல் மரிய செல்வக்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக வாக்கு மூலத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட மூன்றாவது நபரான சிறுவன் பாண்டியை, தகவல் தெரிவிக்க கொலை கும்பல் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலையாளிகள் மூன்று பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்த திருச்சுழி காவல்துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவத்தில் மேலும் இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்