காதல் கணவரையும், பெற்ற குழந்தையையும் கொன்று நாடகமாடிய மனைவி...

காதலித்து திருமணம் செய்த தனது கணவர் மற்றும் பெற்ற குழந்தையை கொலை செய்து விட்டு, அவர்களை காணவில்லை என்று புகார் கொடுக்க சென்ற மனைவியை போலீசார் கைது செய்த அதிர்ச்சி சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
x
வேலூர் மாவட்டம் பாடியை சேர்ந்த ராஜா, தாஜ்புரா கிராமத்தை சேர்ந்த தீபிகா ஆகிய இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இரண்டு பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் திருமணம் இருவீட்டாரின் எதிர்ப்புக்கு இடையிலேயே நடந்துள்ளது. ராஜாவின் பெற்றோர் அடுத்தடுத்து மரணம் அடைந்ததையடுத்து, குழந்தை பிறந்தவுடன் தீபிகா தனது சொந்த ஊரான ஆற்காடு அருகே உள்ள தாஜ்புராவில் வீடு எடுத்து கணவருடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ராஜாவையும், அவரின் குழந்தையையும் காணவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜாவின் உறவினர்கள் தீபிகாவிடம் சென்று கேட்டதற்கு, அவர் வேறு பெண்ணுடன் எங்கேயோ சென்று விட்டார் என பதில் அளித்துள்ளார். காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று அழைத்ததற்கும் அவர் வர மறுத்துள்ளார்.

இந்த நிலையில், உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் தீபிகா தனது கணவரான ராஜாவையும், ஒரு வயதான மகன் பிரனீஷையும் காணவில்லை என்று ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது ராஜாவின் செல்போன் சிக்னலை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். அப்போது ராஜாவின் செல்போன் தன்னிடமே இருப்பதாக தீபிகா கூறியதையடுத்து, அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது.  இதனையடுத்து தீபிகாவிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தீபிகா, தனது தாய் விஜயாவின் துணையுடன் காதல் கணவரான ராஜாவையும், தனது குழந்தை பிரனீஷையும் கொன்று அருகில் உள்ள ஏரிக்கரையோரம் புதைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். தீபிகாவின் காதல் கல்யாணத்தை பிடிக்காத அவருடைய தாய் திட்டமிட்டே ராஜாவை கொலை செய்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து தீபிகாவை அழைத்து சென்ற போலீசார், ராஜா மற்றும் பிரனிஷ் உடல்களை தோண்டி வேளியே எடுத்தனர்.

சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீபிகா மற்றும் அவரின் தாயாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ராஜாவை கொலை செய்தவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி தரவேண்டும் என்றும் அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மனைவியே, தனது காதல் கணவரையும், பெற்ற பச்சிளம் குழந்தையையும் கொலை செய்து புதைத்த சம்பவம் ஆற்காடு அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்