சென்னையில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாடு...

சென்னை மக்கள் குடிநீருக்கு திண்டாடும் நிலையை போக்க, அரசு பல நடவடிக்கைகள் எடுத்தாலும், இந்த பிரச்சினைக்கு தீர்வுக் காண முடியாத நிலையே தொடருகிறது.
x
குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா தற்காலிக நடவடிக்கைகள்?

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், செங்குன்றம் ஏரிகள். வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு,  54 சதவீதம் குறைவாக பெய்தது. இதனால் தற்போது இந்த ஏரிகள் வறண்டுள்ளன. சென்னை மாநகர மக்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்க வேண்டிய நிலையில், தற்போது குடிநீர் வடிகால் வாரியம் 550 மில்லியன் லிட்டர்
மட்டுமே விநியோகம் செய்கிறது. இந்நிலையில், ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் உள்ளதால் போதிய நீர் கிடைப்பதில்லை என சென்னை மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அடுக்குமாடி மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் கேட்டு, குடிநீர் வடிகால் வாரியத்தில்  8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளதால் குடிநீர் தேவை மேலும் அதிகரித்து உள்ளது. 

குடிநீர் ஒப்பந்த லாரிகளை ஜி.பி.எஸ்.கருவி மூலம் கண்காணித்து வருவதாகவும், மக்கள் தங்கள் புகார்களை 
45674567
என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் 30 லாரிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதுஒருபுறம் இருக்க, தண்ணீர் விநியோகத்தை நாளொன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் குறைக்க திட்டமிட்டு உள்ள  நிலையில், குடிநீர் தட்டுப்பாடு என்பது 750 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது. செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் முற்றிலும் வற்றி வறண்டுவிட்ட நிலையில், வீராணத்தில் இருந்து 180 மில்லியன் லிட்டர், புழல் ஏரியில் இருந்து 80 மில்லியன் லிட்டர் , சிக்கராயபுரம் குவாரியில் இருந்து 30 மில்லியன் லிட்டர், பூண்டி ஏரியில் இருந்து 50 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னை குடிநீருக்காக எடுத்து வரப்படுகிறது. இதுதவிர,  நெம்மேலி மற்றும் மீஞ்சூர் கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தின் கீழ் தலா 90 மில்லியன் லிட்டர் நீரும் கொண்டு வரப்படுவதாக வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  316 விவசாய கிணறுகள் மற்றும் 30 ஆழ்துளை கிணறுகள் மூலம் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. மேலும், 13 ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் மூலம் 5 மில்லியன் லிட்டர் தண்ணீரை எடுக்கவும் குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிட்டுள்ளது. கோடையை சமாளிக்க எவ்வளவுதான் புதிய முயற்சிகளை குடிநீர் வடிகால் வாரியம் எடுத்தாலும் அவை எல்லாமே தற்காலிக ஏற்பாடாகவே உள்ள நிலையில்,  தொலைநோக்கு அடிப்படையில் நிறைவேற்றப்படும் திட்டங்களால் மட்டுமே, தண்ணீர் பஞ்சத்தை போக்க முடியும் என்கின்றனர் நீரியல் வல்லுநர்கள்.

Next Story

மேலும் செய்திகள்