மிகவும் பயமாக உள்ளது - சுரங்க வழிப்பாதை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

கரூர் அருகே நான்கு வழிசாலையால் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளை தவிர்க்கவும், பள்ளிக் குழந்தைகளுக்கு ஏதுவாகவும் சுரங்கவழிப் பாதை அமைக்க கோரி, தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கிராம மக்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
கரூர் - நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் இடத்தில் உள்ளது தவிட்டுபாளையம் கிராமம். அந்த கிராமம் வழியே மலைப் பாம்பை போல், நீண்டு நெலிந்து செல்லும் மதுரை- சேலம் 4 வழிச் சாலையில் வாகனங்கள் சீறிப்பாய்ந்து செல்வதில் வியப்பில்லை. மின்னல் வேகத்தில் வரும் வாகனங்களில் சிட்டுக்குருவி போல் விபத்தில் சிக்குகின்றனர் அந்தப் பகுதி மக்கள். சாலையில்  சத்தமென்றால், யார் சிக்கினரோ விபத்தில் என்ற படபடப்புடன் கழிகிறது அப்பகுதி மக்களின் வாழ்க்கை. சிறிய சாலையாக இருந்த போது எளிமையாக சாலையை கடந்து வந்ததாக கூறும் அப்பகுதி மக்கள்,  நெடுஞ்சாலை வந்தபிறகு மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாக கூறுகின்றனர். கட்டிபாளையம், திருவாடுதுறை, நத்தமேடு கிராமங்கள் ஒருபக்கம். தவிட்டுப்பாளையம், புஞ்சை புகலூர், நஞ்சை புகழூர் மறுபுறம். இந்த நெடுஞ்சாலையை அன்றாட தேவைக்காக கடந்தே தீர வேண்டிய கட்டாயம் இந்த கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு.... இதனிடையே, ஆடை தயாரிப்பு ஆலை உள்ளிட்ட வேலைகளுக்கு செல்வோர், பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் என அனைவரும் மரண பயத்தில் சாலையை கடப்பது நம்பிக்கையின் உச்சம். சாலையின் நடுவே அமைத்துள்ள தடுப்பின் வழியே கார், வேன், மோட்டர் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சாலை கடக்கின்றன. மின்னல் வேகத்தில் வரும் வாகனங்களின் வேகத்தில், முதியவர்களின் கணக்கு தப்பிவிடுகிறது. சராசரியாக அரை மணி நேரத்துக்கும் மேல் நின்றால்தான், ஓரளவேனும் பாதுகாப்பாக சாலை கடக்க முடியும் என்ற நிலை. இதில், நண்பர்கள், உறவினர்கள் பலரை இழந்த நினைவுகளோடு அந்த இடத்தில் நின்று சாலையை கடப்பது சொல்லொண்ணா துயரம். பள்ளிக் குழந்தைகள், முதியவர்கள்,  வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் கோருவது நான்கு வழிச்சாலைக்கு கீழாக ஒரு சுரங்கவழிப் பாதை. இடைத் தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட  தவிட்டுபாளையம் மக்கள், இம்முறையாவது தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்