குழந்தை விற்பனை விவகாரம் : "அழகான குழந்தைகளுக்கு அதிக விலை" - அதிர்ச்சி ஆடியோ

சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை போல், பச்சிளம் குழந்தைகளை, ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதா, பேரம் பேசி விற்பனை செய்யும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
x
ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் மற்றும் தவறான உறவில் பிறந்த குழந்தைகளை வாங்கி வந்து, குழந்தை இல்லாத  தம்பதிக்கு விற்பனை செய்து வந்த ராசிபுரம் பகுதியை சேர்ந்த அமுதவல்லி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் ஆடியோ, கேட்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடைகளில் ஆடை வாங்குவதை போல், நிறத்திற்கு தகுந்தாற்போல், ஆண் பெண் குழந்தைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குழந்தைகள் தேவை என்றால்  முன்தொகை கொடுத்து புக்கிங் செய்து கொள்ள வேண்டும் எனவும் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.

நல்ல விஷயங்களுக்கு சமூக வலைதளங்கள் பயன்பட்டு வரும் நிலையில், குழந்தை விற்பனை செய்யும் கும்பலும் அதனை பயன்படுத்தி வந்துள்ளது. குழந்தைகளை வாங்க விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு முதலில் வாட்ஸ் அப் மூலம் புகைப்படங்கள் பகிரப்படுகிறது. அதன் பிறகே பேரத்தை தொடங்குகிறார் இடைத்தரகர் அமுதவல்லி. 

பிரச்சினைகளை தவிர்க்க ஊருக்கு வெளியே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பதாக வெளிப்படையாகவே தனது வாடிக்கையாளரிடம் சொல்கிறார் அமுதவல்லி.  ஆண் பெண் குழந்தைகளுக்கு தனித்தனி விலை நிர்ணயிக்கும் அமுதவல்லி, ஆண் குழந்தைகள் அதிகபட்சமாக 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடுகிறார்.

குழந்தைகளை வாங்கும் பெற்றோருக்கு, 25 நாட்களில் பிறப்பு சான்றிதழையும் அவர்கள் ஏற்பாடு செய்து தருகிறார்கள். அதற்கு தனியாக ஒரு தொகை தந்துவிட்டால் போதும். பெற்றோர்களிடம், மனசாட்டிபடியே நடந்து கொள்வதாக கூறும் அமுதவல்லி, பேரம் முடிந்து குழந்தை நல்லபடியாக கைமாறிய பிறகு, கிடைக்கும் பணத்தில் இருந்து சிறு தொகையை கோவில் அல்லது, அனாதை விடுதிகளுக்கு செலவு செய்வதாகவும் தெரிவிக்கிறார்.

கடைசரக்கு போல குழந்தைகளை பேரம் பேசி விற்பனை செய்யும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அதன் பின்னணியில் இருப்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்