சூலூர் தொகுதி இடைத்தேர்தல் - பொதுமக்கள் கோரிக்கை

சூலூர் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் அப்பகுதியில் சிறு குறு தொழில் கூடம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், சூலூரில் அரசு கலைக்கல்லூரி அமைத்த தர வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்
x
சூலூர் சட்டமன்றத் தொகுதியில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெற்றி பெறும் வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சூலூர் தொகுதியின் வடக்கு பகுதியில் ஏராளமான சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் விசைத்தறி கூடங்கள் உள்ளன. அதன் மூலம் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக இந்த பகுதிக்கு என தனியாக தொழில்கூடம் வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவதாகவும், அதனை இடை தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் நிறைவேற்ற வேண்டும் எனவும்  சிறு,குறு தொழில் முனைவோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும், நீர் ஆதாரங்களை மேம்படுத்த வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேற்படிப்பு படிக்க கோவை, மற்றும் திருப்பூருக்கு செல்ல வேண்டியுள்ளதால்,  சூலூர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்த தரவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் சூலூரில் நீட் மற்றும் ஐஏஎஸ் பயிற்சி மையம் வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல், முக்கியமான நீர் ஆதாரமான சூலூர் ஏரியை ஆழப்படுத்த வேண்டும், திடக்கழிவுகளை முறையாக கையாள வேண்டும் உள்ளிட்டவையும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இடைதேர்தலுக்கு பிறகாவது தங்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேறும் என்று காத்திருப்பதாக சூலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் கூறுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்