சாலை வசதி செய்து கொடுத்தால்தான் வாக்களிப்போம் - மலைகிராம மக்கள்

சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் பல ஆகியும் சாலை வசதி இல்லாத‌தால், தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட மலைகிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
x
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சியில் உட்பட்ட ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, குரவன் குளி என 10க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. தரைமட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த மலைகிராமங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு, சாலை வசதி, மருத்துவ வசதி, பள்ளி வசதி, குடிநீர் வசதி என அனைத்திற்கும் அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். சாலை வசதி இல்லாத‌தால், இங்கு விளையும் காபி, மிளகு , வாழை உள்ளிட்ட விளை மதிப்பு மிக்க பொருட்களை குதிரை அல்லது கழுதை மேல் ஏற்றி தான் விற்பனைக்கு கொண்டு வரவேண்டி உள்ளது. முக்கியமாக, அரசு வழங்கும் இலவச ரேசன் பொருட்களை பெற, இப்பகுதி மக்கள், பெரியகுளத்திற்கு வந்து மூன்று நாட்கள் காத்து கிடக்கின்றனர். இலவசமாக வாங்கும் ரேசன் பொருட்களை கூட, 500 ரூபாய் வரை செலவு செய்து குதிரை மீது ஏற்றி தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று வருகின்றனர். எனவே தங்களது பகுதிக்கு, சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தந்தால் தான் வாக்களிப்போம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்